மாணவி ஸ்ரீமதி வழக்கு… 'ஐகோர்ட் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது' – சீமான்

கனியாமூர் மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கைதான பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனு விசாரணையின்போது உயர் நீதிமன்றம் வெளியிட்ட தகவல் அதிர்ச்சி அளிப்பதாக

தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்ட ஐவரது பிணைதொடர்பான வழக்கின்போது, மாணவியின் மரணம் கொலையல்ல; தற்கொலையெனக்கூறி, வழக்கின் இறுதிமுடிவை இப்போதே உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

வழக்கின் விசாரணையே இன்னும் முழுமையடையாத நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, வழக்கின் இறுதிநிலை குறித்த முடிவுக்கு உயர் நீதிமன்றம் எதனடிப்படையில் வந்தது? இவ்வாறு அறிவிக்கச் சட்டத்திலேயே இடமில்லாதபோது ஏன் உயர் நீதிமன்றம் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? என்பது புரியாத புதிராக உள்ளது.

பொதுவாக ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களது தரப்பிலிருந்து பிணைகோரப்பட்டால், தொடர்புடையவர்களைப் பிணையில் வெளியே விட்டால், அது வழக்கின் விசாரணையைப் பாதிக்குமா? சாட்சியங்களும், ஆவணங்களும் அவர்களால் கலைக்கப்பட வாய்ப்பிருக்கிறதா? பிணையில் வெளியே சென்றால், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிற்கு அச்சுறுத்தலோ, நெருக்கடியோ தரப்படுமா? குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தருவார்களா? என்பதுபோன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்தே, பிணைதொடர்பான முடிவுகள் நீதிமன்றங்களினால் எடுக்கப்பட்டு வருகிறது. பிணைதொடர்பான முடிவெடுக்கப் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளாக இதனைத்தான் வகுத்து அறிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

2004ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சமன்லால் எதிர் உத்திரப்பிரதேச அரசின் வழக்குத் தீர்ப்பில் இவற்றைத் தெளிவுப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மற்றபடி, வழக்கின் தகுதி நிலைகுறித்தெல்லாம் அறிவிக்கக்கூடாது எனும் விதிமுறைக்கு மாறாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யாவரும் குற்றமற்றவர்களென்றும், மாணவியின் மரணம் தற்கொலைதானென்றும் உயர் நீதிமன்றம் கூறியிருப்பது அப்பட்டமான நீதித்துறை விதிமீறலாகும்.

காவல்துறை தரப்பு தற்கொலையென்ற கோணத்திலேயே விசாரணையைக் கொண்டுசெல்வதும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நிரபராதிகளென உயர் நீதிமன்றம் அறிவிப்பதுமான செயல்பாடுகள் பெரும் முரணாகவும், நெருடலாகவும் இருக்கிறது. ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கை, தற்கொலையெனக்கூறி முடித்துவிடுவதற்கு ஆளும் வர்க்கம் காட்டும் அதீத முனைப்பும், கருத்துருவாக்கமும்தான் பெரும் ஐயத்தை விளைவிக்கிறது. இப்போதே வழக்கின் இறுதித்தீர்ப்பு முடிவை உயர் நீதிமன்றம் கூறியிருப்பதன் மூலம் இது விசாரணையின் போக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்துவிடும் அபாயமுண்டு.

அதனை உள்நோக்கமாகக் கொண்டுதான் இத்தகையக் கருத்துகள் உதிர்க்கப்பட்டனவா? எனும் கேள்வி எழுவதை முற்றாய் தவிர்க்க முடியவில்லை. எப்படி நோக்கினாலும், உயர் நீதிமன்றத்தின் இத்தகையச்செயல்பாடும், முன்கூட்டிய அறிவிப்பும் மிகத்தவறான முன்னுதாரணமாகும். இது சி.பி.சி.ஐ.டி. விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்கு எதிராகக் கொடுக்கப்படும் மறைமுக அரசியல் அழுத்தமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருந்துவிட முடியாது. இத்தோடு, பெரும் செல்வாக்கும், அரசியல் பின்புலமும் கொண்டவர்களாக அறியப்படும் பள்ளியின் நிர்வாகத்தினர் பிணையில் வெளியே வருவது என்பது விசாரணைக்கு இடையூறாக அமையும் வாய்ப்பும் உண்டு.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முனைப்போடு செயல்பட்டு, ஸ்ரீமதி மரண வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பிணைக்கெதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமன நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.