ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் உட்பட 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் விமான நிலையத்தில் அவரின் கார் மீது செருப்பை வீசினர். அரசியல் வட்டாரங்களில் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, “நீங்கள் என் செருப்பளவுக்குக் கூட தகுதியில்லாதவர்” எனத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்தான ட்விட்டர் பதிவு ஒன்றில், “உங்கள் முன்னோர்களின் முதலெழுத்துக்களுடன் மட்டுமே வாழும் நீங்களும் உங்களின் கூட்டாளிகளும், சுயமாக உருவாகி பெருமையுடன் விவசாயம் செய்யும் விவசாயியின் மகனை, ஒரு நபராக ஏற்றுக்கொள்ள முடியாது தான். பெரிய பரம்பரை மற்றும் சில்வர் ஸ்பூனில் பிறந்ததைத் தவிர, இந்த பிறவியில் வேறெதாவது பயனுள்ளதைச் செய்திருக்கிறீர்களா?
அரசியலுக்கும் எங்கள் மாநிலத்துக்கும் சாபக்கேடு நீங்கள். பெரிய விமானங்களில் பயணம் செய்யாத எங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இறுதியாக, நீங்கள் என் செருப்பளவுக்குக் கூட தகுதியில்லாதவர். கவலைப்படாதீர்கள், உங்கள் நிலைக்கு நான் ஒருபோதும் இறங்க மாட்டேன்” என அண்ணாமலை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
முன்னதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், `அந்த பெயரைகூட நான் குறிப்பிட விரும்பவில்லை’ என்று பதிவிட்டு, “தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலனி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு” என மறைமுகமாக அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார். அதில் அண்ணாமலை செய்திகள் அடங்கள் புகைப்படங்களையும் அவர் இணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.