கொச்சி: மிக விரைவான வளர்ச்சிக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் போதிய பலம் இல்லாத கட்சியாக பாஜக இருந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன் படி கேரளா வந்துள்ள பிரதமர் மோடிக்கு கொச்சி விமான நிலையத்தில் வர்னர் ஆரிப் முகம்மது கான் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் விமான நிலையத்தின் அருகிலுள்ள அரங்கத்தில் நடைபெறும் பாஜவின் பொது மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். அங்கு உரையாற்றிய அவர்; ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி கொண்டு இருக்கும் வேளையில் நானும் கேரளா வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கேரளாவில் பாஜகவின் தேவையை மக்கள் உணர்ந்து வருகின்றனர், பாரதம் பல துறைகளில் முன்னேறி வருகிறது. அனைத்து குடிமக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தவும், நவீன உள்கட்டமைப்பை உருவாக்கவும் ஒன்றிய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.
கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி செலவு செய்துள்ளது. கேரளாவில் ஏழைகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்க செய்ய ஒன்றிய அரசு உழைத்து வருகிறது. மிக விரைவான வளர்ச்சிக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன. அமுதத்திற்கான சுதந்திரம் என்ற அடிப்படையில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான தீர்மானத்தின்படி பணி நடந்து வருகிறது. இதில், கேரள மக்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். தீர்மானங்களை பா.ஜ.க. செய்து முடிக்கிறது இவ்வாறு கூறினார்.