தமோ: மத்திய பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணி மனைவியை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அவரது கணவர் கொண்டு சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டம் ரானே கிராமத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணிக்கு நேற்று முன்தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவரது கணவர், ஆம்புலன்சுக்கு போன் செய்தார்.
ஆம்புலன்ஸ் வரும் என வெகு நேரமாக காத்திருந்தார். 2 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. ஆனால் மனைவி வலியால் துடித்து கொண்டிருந்தார். என்ன செய்வதென்று ெதரியாமல் கணவன் தவித்தார். உடனே வேறு வழியில்லாமல், தனது கர்ப்பிணி மனைவியை ஒரு தள்ளுவண்டியில் படுக்க வைத்து, சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றார். அந்த மையத்தில் டாக்டரோ, நர்சுகளோ இல்லை. பின்னர் அரசு ஆம்புலன்ஸ் ஒன்றில் அங்கிருந்து ஹட்டாவுக்கு மனைவியை அழைத்து சென்றார்.
அங்குள்ள மருத்துவமனையிலும் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை. அதனால் தமோ மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி மாற்றப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்கள், நர்ஸ்சுகளின் கண்காணிப்பில் கர்ப்பிணி இருந்து வருகிறார். இதற்கிடையே கர்ப்பிணி ஒருவரை அவரது கணவர் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைப்பார்த்த மாவட்ட சுகாதார அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.