பாலக்காடு: கேரள மாநிலம் காசர்கோடு அருகே சென்னை ரயிலை கவிழ்க்க முயன்ற சேலம் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் பேக்கல் என்ற பகுதியில் சென்னை- மங்களூர் செல்லும் ரயில் தண்டவாள பாதையில் கற்கள் வீசுவது, மது பாட்டில்கள் வீசுவது என சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதுபற்றி துப்புதுலக்க காசர்கோடு மாவட்ட எஸ்பி வைபவ் சக்சேனா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில், டிஎஸ்பி சுனில்குமார், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கதிரேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றனர். இவர்கள் தீவிரமாக துப்பு துலக்கினர். அப்போது, தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டு வைத்து, ரயிலை கவிழ்க்க முயன்றதாக கனகவல்லி (22) என்ற பெண்ணை கைது செய்தனர். இவரிடமிருந்து 3 அடி நீளம் கொண்ட இரும்பு துண்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இவர், சேலம் பகுதியை சேர்ந்தவர் என்றும், தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கனகவல்லிக்கும், தண்டவாளத்தில் கற்கள், மதுபாட்டில்கள் வீசிய நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.