ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல் குலாம் நபி ஆசாத் வரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்தவர்கள் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ராஜினாமா செய்து வருகிறார்கள். முடிவிலியாக தொடரில் இந்த தலைவர்களின் ராஜினாமாக்களுக்கு முன், அவர்கள் ராகுல் காந்தியிடம் என்ன எதிர்பார்த்தார்கள்? ராஜினாமா செய்யும் போது ராகுல்மீது அவர்கள் பகிரங்கமாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட தகவல்களை இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
ராகுல்காந்தியும் அவரது தாயார் சோனியா காந்தியும் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு மேலாக அக்கட்சியை வழிநடத்தி வருகின்றனர். 2017 முதல் 2019 வரை இரண்டு ஆண்டுகள் மட்டுமே ராகுல் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்கட்சியில் இருந்து வெளியேறும் தலைவர்களின் ராஜினாமா கடிதங்களில் தவறாது இடம்பெறும் பெயராக ராகுல் காந்தியின் பெயர் மாறியிருப்பதை மறுக்கவியலாது. முதிர்ச்சியடையாத, குழந்தைத்தனமான, திமிர்பிடித்த, விசித்திரமான, கணிக்க முடியாத, தீவிரமற்ற, சுய சேவை, பாதுகாப்பற்ற, அவமதிப்பு ஆகிய உரிச்சொற்கள் அனைத்தும் ராகுலை நோக்கி அந்த ராஜினாமா கடிதங்களில் இருந்து பாய்ந்த கடுமையான விமர்சன வார்த்தைகள் ஆகும்.
மூன்று தலைமுறைகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களும் இந்த வார்த்தைகளை அதே காட்டத்துடன் பயன்படுத்தியுள்ளனர். 2015ல் ஹிமந்தா பிஸ்வா சர்மா கட்சியை விட்டு வெளியேறினார் என்றால், தற்போது குலாம் நபி ஆசாத் அதை செய்துள்ளார். இதற்கு இடையில், ஜோதிராதித்ய சிந்தியா, கபில் சிபல், அஸ்வனி குமார், ஆர்பிஎன் சிங், ஜிதின் பிரசாத், சுஷ்மிதா தேவ், சுனில் ஜாகர், ஹர்திக் படேல், என் பிரேன் சிங், பிரேமா காண்டு, பிசி சாக்கோ, ஜெய்வீர் ஷெர்கில் என பலர் காங்கிரஸ் முகாமில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
“கடந்த காலங்கள் கடந்ததாக இருக்கட்டும்” என்ற பழமொழியை சற்று புறம்தள்ளி இவ்வளவு தலைவர்கள் ஏன் ஒரே ஒருவரை நோக்கி தங்கள் விரல்களை நீட்டி குற்றம் சுமத்தி வெளியேறினார்கள் என்பதை ஆராய்வதும் காலத்தின் கட்டாயமே! அவ்வாறு செய்வதன் மூலம் திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் நம்மால் அறிய முடியும் என்பதால் அந்த ஆராய்ச்சிக்கு உங்களையும் சேர்த்து அழைக்கிறோம்.
பொறுப்புணர்ச்சி இல்லாத சர்வாதிகாரம்:
குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியுடனான தனது அரை நூற்றாண்டு கால உறவை முடித்துக் கொண்டதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸின் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிவைச் சேர்ந்த பல தலைவர்களும் அவருடன் ராஜினாமா செய்து, தனது சொந்தக் கட்சியை அமைக்க உள்ள ஆசாத்துடன் சேர உள்ளனர். அவரது ராஜினாமா கடிதத்தில் என்ன கூறினார் என்பதை இப்போது பார்ப்போம். “ராகுல் காந்தி அரசியலில் நுழைந்த பிறகு, குறிப்பாக சோனியா காந்தியால் கட்சியின் துணைத் தலைவராக ஆக்கப்பட்ட பிறகு, காங்கிரஸின் முழு ஆலோசனை பொறிமுறையையும் அவர் தகர்த்துவிட்டார்.” என்று எழுதியிருந்தார் குலாம் நபி ஆசாத்.
2015 ஆம் ஆண்டு ஹிமந்தா பிஸ்வா சர்மா எழுதிய ராஜினாமா கடிதத்தில், “ராகுல் காந்தி எனது மற்றும் தருண் கோகோயின் பதவியை பறிக்க விரும்புகிறார். அவர் திமிர் பிடித்தவர்போல அஸ்ஸாம் முதல்வரை மாற்றுவது அவரது தனிப்பட்ட உரிமை என்று கூறினார். எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுத்த அஸ்ஸாம் மக்களை விட அவர் வலிமையானவர் என அவர் நம்பினார். நானும் என் மனைவியும் அவமானப் படுத்தப்பட்டோம். சர்வாதிகார குடும்ப அரசியலை கட்சி ஊக்குவிக்கிறது. இது அஸ்ஸாம் மக்களுக்கு துரோகம் செய்தது.” என்று குறிப்பிட்டார். அப்போது அஸ்ஸாம் அரசியலில் மிக முக்கிய புள்ளியான அவர் 23 ஆண்டு கால காங். கட்சி உறவை முறித்து சில எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் ஐக்கியமானார்.
பிரதமர் மோடியிடம் இருந்து தனிக்கவனத்தைப் பெற்ற சர்மா பின்னர் அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி மலர தன்னாலான பணிகளை மேற்கொள்ளத் துவங்கினார். விளைவு அவர் தற்போது அவர் அஸ்ஸாம் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். குலாம் நபி ஆசாத் ராஜினாமா கடிதத்தின் உள்ளடக்கங்கள் தனது ராஜினாமா கடிதத்தைப் போலவே இருப்பதாக சர்மா தற்போது கூறியுள்ளார்.
“காங்கிரஸில் காந்திகள் மட்டுமே எஞ்சியிருக்கும், விசுவாசிகள் அனைவரும் வெளியேறும் ஒரு காலம் வரும் என்று நான் சொன்னேன். இப்போது அதுதான் நடக்கிறது. காங்கிரஸில் உள்ள பிரச்சனை என்னவென்றால், ராகுல் காந்தி முதிர்ச்சியற்றவர், விசித்திரமானவர், கணிக்க முடியாதவர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் காங்கிரஸ் தலைவர் கட்சியை கவனிக்கவில்லை. அவர் பாஜகவுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் ராகுல் காந்தியை ஊக்குவிக்க முயற்சித்து வருகிறார்” என்று ஆசாத் ராஜினாமா செய்த பிறகு ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
ஆசாத்துக்கு முன், கபில் சிபல் மற்றும் அஸ்வனி குமார் ஆகியோரும் இந்த ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறினர். அதிருப்தி கொண்ட காங்கிரஸ் தலைவர்களின் G23 குழுவின் முக்கிய உறுப்பினரான கபில் சிபல், தலைவராக இல்லாவிட்டாலும், சுனில் ஜாக்கரின் ராஜினாமாவுக்கு வழிவகுத்த சரண்ஜித் சிங் சன்னியை பஞ்சாப் முதல்வராக்கிய அனைத்து முடிவுகளையும் ராகுல் காந்தி எடுக்கிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார். 30 ஆண்டு கால காங். உறவை முறித்துக் கொண்ட கபில் சிபல், காந்திகள் கட்சியின் புதிய தலைமைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆசாத்தின் ராஜிமானா கடிதத்தில் கடந்த கால ஆட்சியின் போது நடைபெற்ற நிகழ்வொன்றை சுட்டிக்காட்டியிருந்தார். “2013 ஆம் ஆண்டு தனது சொந்த கட்சியால் அப்போதிருந்த மத்திய அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை பகிரங்கமாக கிழித்ததன் மூலம் ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற தன்மையை காட்டினார். அது குழந்தைத்தனமான நடத்தை. பிரதமர் பதவியின் மாண்பை முற்றிலும் தலைகீழாக மாற்றிய செயல் அது. அது 2014 தேர்தலில் கட்சித் தோல்விக்கு பெரும் பங்களிப்பை வழங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அந்த சம்பவம் நடைபெற்ற பின்னர் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் பதவியில் குலாம் நபி ஆசாத் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில், கடந்த மூன்று ஆண்டுகளாக காங்கிரசுக்கு முழுநேர தலைவர் இல்லை. கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆனால் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் பதவியை ஏற்க சோனியா காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது நடக்குமானால் வழக்கம்போல ராகுல் காந்திக்கு அதிக பொறுப்பு இல்லாமல் அதிகாரங்கள் தொடரும் என்று அதிருப்தியாளர்கள் அஞ்சுகின்றனர்.
இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா?
ஜோதிராதித்ய சிந்தியா தனது 18 ஆண்டுகால தொடர்பை முடித்து 2020 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறினார். மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்தின் அரசாங்கத்தைச் சேர்ந்த காங். கட்சி எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்த சிந்தியாவைப் பின்தொடர்ந்து பாஜகவில் ஐக்கியமாகினர். மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்தது. “எனது மாநிலம் மற்றும் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன். ஆனால் இந்த கட்சிக்குள் என்னால் இதை செய்ய முடியவில்லை. கமல்நாத்தின் செயலற்ற தன்மையே ராஜினாமாவுக்கு காரணம்” என்று அவர் தெரிவித்த போதிலும், அவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி தர கட்சித் தலைமை விரும்பவில்லை என்பதே முக்கிய காரணமாக கூறப்பட்டது.
ராகுல் காந்தி அரசியலுக்கு வந்ததும், இளைஞர் காங்கிரஸை புத்துயிர் பெறுவதில் தான் கவனம் செலுத்தியதாக கூறினார். விரைவில், இளம் முகங்களை ஊக்குவிக்கும் ஒரு தலைவரின் உருவத்தை அவர் பெற்றார். அவரது அந்த முயற்சியில் பல பழுத்த அரசியல்வாதிகளை அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆசாத் கூட தனது ராஜினாமா கடிதத்தில், “அரசியலில் தகுதி அல்லது ஆர்வம இல்லாத ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களை அவமானப்படுத்துவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் பதவியை ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தார்”என்று கூறியுள்ளார்.
ஆனால் அசாம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைப் போலவே, ராஜஸ்தானின் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் போது அசோக் கெலாட்டின் தேர்வு ராகுலுக்கு உவப்பளிக்கவில்லை என்று கூறப்பட்டது. இறுதியில் அது சச்சின் பைலட்டின் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. இருப்பினும், சர்மா மற்றும் சிந்தியா சம்பவம் செய்ததை போல, சச்சின் பைலட்டின் ராஜினாமா பெரிய சேதத்தை விளைவிக்கவில்லை. சச்சின் பைலட்டின் தாக்குதலை தனது சக்கர வியூகத்தால் அசோக் கெலாட் முறியடிக்கவே, தற்போது தலைவர் பதவி அவரது தலையை நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அனைவரும் ராகுல் காந்தியின் கீழ் ஓரங்கட்டப்பட்டதாகவும், புதிய அனுபவமில்லாத துரோகிகளின் கூட்டம் காங்கிரஸை இயக்கத் தொடங்கியதாகவும், இன்று அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் கூட கட்சி முடிவுகளை எடுத்து வருவதாகவும் ஆசாத் கூறியுள்ளார். ஆசாத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேறிய மற்றொரு காங் தலைவரான ஜெய்வீர் ஷெர்கில் ஒரு வருடமாக முயன்றும் ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை என்று கூறினார்.
கூட்டணிக் கட்சிகளுக்கே கலக்கம்:
2024 இல் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிட எதிர்க்கட்சிகளுக்கு அதிகபட்ச ஒற்றுமை தேவைப்படும்போது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போன்ற தலைவர்கள் , பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அல்லது சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆகியோர் சோனியாவை அன்புடன் சந்திக்கின்றனர். ஆனால் ராகுலை தவிர்த்து விடுகின்றனர்.
ராகுல் மட்டுமா பிரச்னை?
தேர்தல் தோல்விகளுக்கும் கட்சியின் நடைமுறைச் சிக்கல்களுக்கும் காரணமாக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படும் வேளையில், பல தேசிய மற்றும் மாநில விவகாரங்களில் தனியாளாக குரல் கொடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டதையும் மறக்கவியலாது. மேலும் மாநில அளவிலான தலைவர்கள் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னரும் கோஷ்டி பூசல் காரணமாக தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டியதும் கவனிக்க வேண்டிய அம்சமே. ஜனநாயத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி. ஆனால் ராகுல் தலைவராக இல்லாத இக்காலக் கட்டத்தில் அவ்வாறான எதிர்க்கட்சி செயல்பாட்டை தற்போது வெளியேறிய தலைவர்கள் யாராவது முன்னெடுத்தார்களா என்பதையும் சிந்தித்து பார்த்தால் அங்கு ஒரு தேக்க நிலை இருப்பதை புரிந்து கொள்ளலாம்.
என்ன செய்ய வேண்டும் ராகுல் காந்தி?
காங். கட்சித் தலைவர்களான சோனியா, ராகுல் இருவரையும் சமீபத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்கள். அப்போது நாடு முழுவதும் காங்கிரஸார் நடத்திய போராட்டங்களை இன்னும் சில காலத்திற்கு மறக்கவியலாது. அவ்வளவு வீரியமிக்க போராட்டங்கள் அவை. ஆனால் மக்கள் பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் சமீபத்தில் அவ்வளவு ஆக்ரோஷ போராட்டம் எதையாவது முன்னெடுத்துள்ளதா என்றால் கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க கட்சி சுணங்கிப் போவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எனவே அடுத்த கட்ட புலிப்பாய்ச்சலுக்கு ஏதுவாக, முழு கட்சியையும் முழு வீச்சில் அரியணை நோக்கி செலுத்த ராகுல் காந்தி தலைமைக்கு வர வேண்டும் அல்லது தகுதியான ஒருவருக்கு வழிவிட்டு முழுமையாக நகர வேண்டும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM