ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தளத்துக்கு லடாக்கின் மர்கா பள்ளத்தாக்கு அருகே உள்ள நிமலிங் முகாமில் இருந்து நேற்று அவசர அழைப்பு வந்தது. அதில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர், அடார் ககானா மலை உச்சியில் சிக்கி இருப்பதாகவும் வாந்தி, ஆக்சிஜன் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, விங் கமாண்டர் ஆஷிஷ் கபூர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு, ஹெலிகாப்டரில் அங்கு சென்றது. அங்கு 16 ஆயிரத்து 800 அடி உயர மலை உச்சியில் சிக்கி இருந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவரை பத்திரமாக மீட்டனர். ஆக்சிஜன் குறைவால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஒரு மணி நேரத்தில் மீட்ட விமானப்படைக்கு பாரட்டுகள் குவிகின்றன.