மதுரை: மதுரை வைகை ஆற்றில் தரைப்பாலங்களை மூழ்கடித்து இரு கரைகளையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வைகை ஆற்று நான்கு வழிச்சாலைகளில் செல்ல போலீஸார் தடை விதித்தனர். அதனால், அனைத்து வானகங்களும் நகரப்பகுதியில் வந்து சென்றததால் நகரப் பகுதியில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தேனி மாவட்டத்திலும் பெய்யும் கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணை நீர் மட்டம் 70 அடியாக உயர்ந்ததால் அணையில் இருந்து ஆற்றில் 4,006 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வைகை அணை உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் வெள்ள அபாய எச்சரிக்கை விட்துள்ளனர்.
மதுரை வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது. இந்த வெள்ள நீர் சிம்மக்கல் யானைக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. அதோடு, வைகை கரை நான்கு வழிச்சாலைகளில் யானைக்கல் தரைப்பாலம் பகுதி, தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரி தரைப்பாலம் பகுதியிலும் ஆற்றங்கரைகளை தாண்டி தண்ணீர் ஓடுவதால் இந்த சாலைகளை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. அதனால், இந்த சாலைகளில் வாகனப் போக்குவரத்திற்கு போலீஸார் தடை விதித்தனர். கோரிப்பாளையம் சிக்னகல் பகுதியில் வதுபுறமாக மீனாட்சி கல்லூரி வழியாக வைகை கரை நான்கு வழிச்சாலையை போலீஸார் தடுப்பு வைத்து இன்று அடைத்தனர். அதனால், இந்த சாலையில் செல்வோர் இன்றுஏவி மேம்பாலம் வழியாக சென்றனர்.
வைகை கரை நான்கு வழிச்சாலையை செல்லமுடியாத வாகனங்கள் அனைத்தும் நகரப்பகுதிகளில் வந்து சென்றதால் இன்று நகரச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள், ஊர்ந்து சென்றன. ஏற்கெனவே மதுரை கோரிப்பாளையம், பனங்கல் சாலை, தல்லாக்குளம் சாலை, சிம்மக்கல், பெரியார் நிலையம் உள்ளிட்டப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வாகன ஒட்டிகளுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். இன்று வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் இந்த சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று சென்றன.
குறிப்பாக, கோரிப்பாளயைம் சிக்னல் பகுதியில் 4 முதல் 5 முறை சிக்னல் விழுந்தப்பிறகே வாகனங்கள் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடிந்தது. அதனால், அந்த ஒரு இடத்தை கடப்பதற்கு மட்டுமே இன்று வாகன ஓட்டிகள், குறைந்தப்பட்சம் 20 நிமிடங்கள் முதல் 30 நிமடங்கள் வரை காத்திருந்தனர். இந்த ஒரு சாலையில் ஏற்பட்ட நெரிசல் நகரின் அனைத்து சாலைகள் போக்குவரத்தையும் பாதித்தது. போலீஸார், வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரையோர நான்கு வழிச்சாலை, தரைப்பாலங்களில் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.