தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்றும் மழை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக மலைப் பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் ஆனந்தகிரி, அப்சர்வேட்டரி, பேருந்துநிலையம், அண்ணாசாலை, ஏரிச்சாலை, ஆனந்தகிரி, உள்ளிட்ட பகுதிகளிலும், தாண்டிக்குடி, ஊத்து, கூடம்நகர், மன்னவனூர், கூக்கால், கிளாவரை, போலூர் உள்ளிட்ட மலைக் கிராமப் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது. அதிக பட்சமாக கொடைக்கானல் பகுதியில் மட்டும் 230 மிமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. கொடைக்கானல் படகு குழாம் பகுதியில் 170மிமீ மழை பெய்துள்ளது.
இது தவிர இன்று (01.09.2022) 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். குமரிக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு வங்கக் கடல் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று இன்றும், நாளையும் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil