50 பேரை மயக்கி பணம், செல்போன் பறிப்பு.. கைதான வடமாநில கும்பல் பற்றி பரபரப்பு தகவல்..!

திருப்பூர் குமரன் சிலை அருகே கடந்த 19-ம் தேதி சவுதப் சவுத்திரி (26) என்பவர் மயங்கிய நிலையில் கிடந்தார். ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்தவர் என்பதும், ஊருக்கு செல்வதற்காக கடந்த 16-ம் தேதி ரயில் நிலையத்துக்கு வந்த போது அவரிடம் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் பேச்சுக் கொடுத்து பிஸ்கட் சாப்பிட வைத்துள்ளனர்.

அதை சாப்பிட்டு மயங்கியவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். மேலும் சவுதப் சவுத்திரியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை எடுத்துச் சென்று அதிலும் ரூ.27 ஆயிரத்தை எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.வனிதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மேலும், திருப்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் ரயில் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி துப்பு துலக்கினர்.

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலம் அரையா, சாகை பகுதியை சேர்ந்த சல்மான் (27), மனுவார் ஆலம் (25), முகமது ஆசாத் (32), அப்துல்லா (31), முகமது மமுத் ஆலம் (31) ஆகிய 5 பேரை திருப்பூர் ரயில் நிலையம் அருகே வைத்து பிடித்தனர்.

இவர்கள் அனைவரும் உறவினர்கள். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, திருப்பூர் சின்னக்கரை மற்றும் சூர்யா காலனி பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மயக்க மருந்து கொடுத்து வடமாநிலத்தவர்களை குறி வைத்து பணம், பொருட்களை பறித்துள்ளனர்.

இதற்காக, பீகாரில் உள்ள மெடிக்கல் கடைகளில் அதிக விலை கொடுத்து தூக்க மாத்திரைகளை மொத்தமாக வாங்கி திருப்பூருக்கு கொண்டு வந்து இருப்பில் வைத்துள்ளனர்.

5 பேரும் சேர்ந்து கடந்த 4 மாதங்களாக ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் சொந்த ஊர்க்காரர் போல் பேச்சுக் கொடுத்து டீ, குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளனர்.

அவர்கள் சாப்பிட்டு மயங்கியதும் அவர்களிடம் இருந்து செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்துள்ளனர். திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது அதிக பணம் வைத்திருப்பார்கள் என்பதால் அவர்களை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.

திருப்பூர் காதர்பேட்டை, பழைய பஸ் நிலையம், வெள்ளி விழா பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பலரிடம் கைவரிசை காட்டியதையடுத்து புகார்கள் வரவே அந்த கும்பலை மடக்கி பிடித்துள்ளோம். 5 பேரும் உறவினர்கள் என்பதுடன் பீகார் மாநிலத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள்.

வடமாநில தொழிலாளர்களை மயக்க பிஸ்கட்டுகள் வாங்கி அதில் 5 பேரும் சேர்ந்து மயக்க மருந்து க்ரீமை தடவி கொடுத்துள்ளனர். 50 பேரை மயக்கி பணம்-செல்போனை பறித்துள்ளனர். இதனை ஒரு தொழிலாகவே செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

5 பேரிடம் இருந்து 30 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகள், மயக்க மாத்திரைகள், மயக்க மாத்திரைகளை பொடியாக்கி வைத்த பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.