இந்திய ஏபிடி சூர்யக்குமாரின் பேட் ஹாங்காங் பந்துவீச்சை சூறையாடி, சூப்பர் 4-க்குள் இந்தியாவை எடுத்துச் சென்றுள்ளது. ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், லீக் சுற்றில் இரண்டு போட்டிகளையுமே இந்தியா வென்று, அதிரடியாக சூப்பர் 4-ல் நுழைந்துள்ளது.
சர்வதேச டி20 தரப்பட்டியலில் வேண்டுமென்றால் இடங்கள் மாறலாம், ஆனால், இந்தியாவின் தற்போதைய தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் என்றால் அது சூர்யக்குமார் யாதவ்தான்.
“ரிலே”வில் ஓடும் வீரர்களில், அணியின் தலைசிறந்த வீரர், எப்பொழுதும் இறுதி நபராகத்தான் ஓடுவார். காரணம், முந்தைய நபர்களால் ஏற்பட்ட தேக்கத்தையும் நேர் செய்ய வேண்டிய பொறுப்பு அவருடையது. சூர்யாவின் ஹாங்காங்குக்கு எதிரான இன்னிங்ஸும் அப்படிப்பட்டதுதான். கே.எல்.ராகுலின் பேட் சாப்பிட்டு வீணாக்கிய பந்துகளுக்கான ரன்களையும் சூர்யாவிடமிருந்தே இந்தியா எதிர்பார்க்க, அதற்கு மேலும் தந்தார் சூர்யா.
கடந்த உலகக் கோப்பையை இந்தியா கைநழுவ விட்டதற்கான முக்கியக் காரணம், அதில் இந்தியாவின் சராசரி பவர்பிளே ரன்ரேட்டான 7.53. இதைத் திருத்தும் விதமாகத்தான் அதற்கடுத்து வந்த போட்டிகளில் அட்டாக்கிங் பாணியைக் கையிலெடுத்து 8.95 என பவர்பிளே ரன்களைக் கூட்டியிருந்தது. 2022-ல் ஆடிய 22 டி20 போட்டிகளில் 17-ஐ இந்தியா வென்றதற்கும் இதுவே காரணம். ஆனால், மறுபடியும் பழைய அணுகுமுறைக்கே இந்தியாவை மாற்றுவது போன்றுதான் கே.எல்.ராகுலின் ஆட்டம் இருந்தது.
ஸ்லோ விக்கெட்தான், பௌலர்களும் நன்றாகவே வீசினார்கள்தான். ஆனாலும் அதையெல்லாம் கூட சமாதானமாக ஏற்றுக் கொள்ள முடியாத அளவு ராகுலின் பேட்டிங் இருந்தது. ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸர் அடிக்கும் போது இருந்த அந்தத் துணிவு, மற்ற பந்துகளில் அப்படியே காணாமல் போய் விட்டது. குறிப்பாக, ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரது ஆட்டம் சோபிக்கவில்லை. டவுன் தி டிராக் இறங்கி வந்தோ, ஸ்வீப் ஷாட் ஆடியோ ரன்கள் சேர்க்க முயலவில்லை. இவரது இந்த ஆட்டமுறையால் அழுத்தம் கடத்தப்பட்ட ரோஹித் ஸ்லோ பாலில் பெரிய ஷாட்டுக்கு முயன்று ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்ததாக, ராகுலுக்கு பார்ட்னரான கோலியும் ஃபார்மை மீட்டெடுப்பதில் கவனமாக இருப்பதால் தொடக்கத்தில் ரன்ரேட் மொத்தமாகப் படுத்தேவிட்டது. ஸ்பின்னர்களுக்கு எதிராக தங்களது விக்கெட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அவர்கள் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. குறிப்பாக, ஏசான் கான் மற்றும் முர்டஜாவின் சுழல் இக்கூட்டணிக்கு நெருக்கடி தந்தது. ஏசானின் பௌலிங் சக்லைன் முஸ்டாக்கை நினைவுபடுத்துவதைப் போல இருந்தது, முர்டஜா, வேகத்தைக் குறைத்து ரன் சேர்ப்பதை இன்னமும் கடினமாக்கினார். 10 ஓவர்கள் முடிவில்கூட 70 ரன்கள் மட்டுமே வந்து சேர்ந்திருந்தன. போட்டியின் 33% பந்துகளைச் சந்தித்திருந்த ராகுல், அணியின் ஸ்கோரில் 19 சதவிகிதம் ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இந்த இடைவெளிதான் இந்தியாவை சூர்யா, பண்ட் என மற்றவர்களிடமெல்லாம் ஓப்பனரைத் தேட வைத்துள்ளது.
13-வது ஓவரில் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று ராகுல் வெளியேறிய போது இந்தியாவின் ஸ்கோர் வெறும் 94தான். ஏழு ஓவர்கள் எஞ்சியிருக்கும் போதுதான் சூர்யக்குமார் உள்ளே வந்தார். உண்மையில், அவர் வந்த பிறகுதான் களத்திற்கே உயிர் வந்தது. போட்டியிலும் அனல் பறக்கத் தொடங்கியது. கோலியும் அதன் பின்தான் தனது ஸ்ட்ரைக்ரேட்டை சற்றே அதிகரித்தார். பல நாள்களாகத் தேடிக் கொண்டிருந்த பழைய கோலியின் சாயலை சில ஷாட்களில் பார்க்க முடிந்ததோடு அவரது அரைசதமும் வந்து சேர்ந்தது. மார்ச் 2021-க்குப் பிறகு, இதுதான் (59) கோலியின் அதிகபட்ச டி20 ஸ்கோர்.
ஸ்லோ விக்கெட், பந்துகள் பேட்டுக்கு வரவில்லை, இதெல்லாம் மற்ற பேட்ஸ்மேன்கள் கூறும் சமாதானம். சூர்யக்குமாரைப் பொறுத்தவரை களம் என்பதே அவருக்கு அவுட் ஆஃப் சிலபஸ்தான். பாண்டிங், தான் ஆடும் போது, தனக்கு ஃபீல்டர்கள் தெரிவதில்லை, நடுவிலுள்ள இடைவெளி மட்டுமே தெரியும் என்பார். சூர்யாவுக்கோ, ஃபீல்டர்கள், இடைவெளி எதுவுமே தெரிவதில்லை. பந்தும் பவுண்டரி லைனும் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது. அதுவும் கல்லி கிரிக்கெட்டில் ஆடுவது போன்ற அன்ஆர்தடாக்ஸ் ஷாட்களின் அணிவகுப்புதான் அவரது மொத்த இன்னிங்ஸும். 130 என்பது முதல் இன்னிங்ஸின் ஆவரோஜாக உள்ள பிட்சில் 170 ரன்கள் நல்ல ஸ்கோர் எனச் சொல்லப்பட, 261 ஸ்ட்ரைக் ரேட்டில் வந்த அவரது ரன்கள், இலக்கை 193 வரை கொண்டு போய் நிறுத்தியது. ஹர்திக் எந்த வகையில் இந்தியாவின் பொக்கிஷமோ, சூர்யாவும் அப்படித்தான்.
194 என்பது கடின இலக்கென்றாலும் சர்வதேச தரம் நிறைந்த ஹாங்காங்கின் பந்துவீச்சு, அவர்களுடைய பேட்டிங்கிலும் எதிரொளிக்கலாம் என்றே கணிக்கப்பட்டது. அதிலும், ஹர்தீக் பாண்டியாவும் இல்லாததால் ஐந்து பௌலர்களோடு களம் காண வேண்டிய நிலையில் இந்தியா இருந்தது. ஆனாலும் சுழலுக்கு ஆதரவளிக்கும் களம் என்ற பிட்ச் ரிப்போர்ட், சஹால் மற்றும் ஜடேஜாவின் நாளாக மாறலாம் என்பதற்கு கட்டியம் கூறியிருந்தது.
ஜடேஜாவின் பங்களிப்பு இரு விக்கெட்களில் இருந்தது. ஓப்பனரான நிஜாஹட்டினை ஒரு அதிவேகமான அற்புதமான ரன் அவுட்டினால் (அதுவும் ஃப்ரீ ஹிட் பாலில்) ஜடேஜா அனுப்பினார். அது மட்டுமின்றி ஓப்பனர்கள் வெளியேறிய பின், நின்று ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த ஹயாட்டினையும் 41 ரன்களோடு வெளியேற்றினார். ஹயாட்டின் இன்னிங்ஸ்தான் ஹாங்காங் ரசிகர்கள் மத்தியில் சற்றே நம்பிக்கையை விதைத்திருந்தது. மேலும், கே.டி.ஷா, ஜீசன் அலி, ஸ்காட் என பின்வரிசை வீரர்களும் இறுதிவரை நின்று போராடவே செய்தனர். குறிப்பாக நிஜாகட் தவிர்த்து யாருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 100-க்குக் கீழ் இறங்கவில்லை என்பது ‘இன்டென்ட்’ என்ற வார்த்தையைத் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து ராகுலின் இன்னிங்ஸோடு ஒப்பிட வைத்தது.
இந்தியத் தரப்பில் புவனேஷ்வர், ஜடேஜா, சஹால் ஆகியோர் எப்போதும் போல் சிறப்பாகவே பந்து வீசினர். ஆனால், அர்ஷ்தீப் மற்றும் அவிஷ் கானின் பந்துகள் சற்று அதிகமாகவே அடிபட்டன. குறிப்பாக, அவிஷ் கானின் 4 ஓவர்களில் 53 ரன்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இன்னொரு வேகப்பந்து வீச்சாளரை உலகக் கோப்பைக்கு முன்னதாகத் தேர்ந்தெடுந்து பயிற்சி அளிக்க வேண்டிய அவசியத்தை இந்தியத் தரப்புக்கு அவிஷ் கானின் ஸ்பெல் உணர்த்தியிருக்கும். அதுவும், தனது சர்வதேச டி20 கரியரில் டெத் ஓவரில், 38 பந்துகளை வீசி, இரு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து, 114 ரன்களை வாரி வழங்கி உள்ளார் அவிஷ். அவரால் அந்த அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை என்றால், இந்தியா அவரை மத்திய ஓவர்களிலாவது பரிட்சித்துப் பார்க்கலாம். இப்படியே தொடர்ந்தால் இது பல போட்டிகளை இந்தியா இழக்கக் காரணமாகலாம்.
இறுதியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதுதான் என்றாலும், அது பல பாடங்களை கற்றுத் தந்ததாகவே இருக்கிறது. ராகுல் ஆட்டமிழந்து, சூர்யக்குமார் வந்து வாண வேடிக்கை காட்டாமல் இருந்திருந்தால் இறுதி ஓவர்கள் த்ரில் நிமிடங்களாக மாறி, இந்தியா – பாகிஸ்தான் போட்டியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்திருக்கும். சூர்யாவின் அந்த 68 ரன்கள்தான் இந்தியாவை ஓரளவு சேஃப் ஜோனுக்கு நகர்த்தியிருந்தது.
சேஸிங் செய்யும் அணிக்கே வெற்றி என்ற எழுதப்படாத ‘பல டி20 இரவு அரபுக் கதைகளை’ அடித்து எழுதி மாற்றியதோடு சூப்பர் 4-ல் ஆஃப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக நுழைந்துள்ளது இந்தியா.
கோலியின் ஃபார்ம் மெல்ல மெல்லத் திரும்புவதும், சூர்யாவின் அதிரடியும் இந்தியாவிற்கு நேர்மறை விஷயங்கள்தான். எனினும், பவர்பிளே பரிதாபங்களைக் களைந்து வேகப்பந்து வீச்சு குறைபாடுகளைச் சரி செய்வது ஆகியவற்றைத் துரித கதியில் சீரமைப்பதும் இந்தியா உடனடியாக செய்ய வேண்டியது.