கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திக் சிதம்பரம் பொதுமக்களை நாடி செல்லும் எந்த முயற்சியும் கட்சிக்கு பலம். தொண்டர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துவதும், பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை அறியவும் இது ஒரு பெரும் வாய்ப்பு என தெரிவித்தார். குலாம் நபி ஆசாத் விலகியது தொடர்பான கேள்விக்கு, கட்சியை விட்டு எந்த ஒரு கடைத்தொண்டன் சென்றாலும் அது கட்சிக்கு பின்னடைவு தான் என பதிலளித்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி விசித்திரமான முறையில் தமிழகத்தில் உள்ளது எனவும் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம். அதனால் ஒத்துப்போக வேண்டும் ஏனென்றால் கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளோம். அதனால் எதிர் கட்சியாக செயல்பட முடியாது. யார் தலைவராக இருந்தாலும் இந்த தர்ம சங்கடம் எங்களுக்கு இருக்கத்தான் செய்யும் எனவும் தெரிவித்தார்.
தன்னைபொறுத்தவரை காமராஜ் போன்ற ஒரு தலைவர் தன்னுடைய அறிவுக்கோ நினைவுக்கோ தோன்றவில்லை எனக் கூறிய கார்த்திக் சிதம்பரம் காமராஜர் போன்று ஒருவர் தோன்றினால் தான் காமராஜர் ஆட்சி அமைய முடியும் என்றார்.
சுங்கக்கட்டணம் உயர்வு தொடர்பான கேள்விக்கு, மத்தியில் உள்ள அரசு சாதாரண மக்களிடையே வரிச்சுமையை கூட்டிக்கொண்டே போவதுதான் வாடிக்கை என கூறியவர், இந்த பிரதமரும் இந்த நிதியமைச்சரும் உள்ளவரை சாதாரண மக்களுக்கு எந்தவிதமாக நிவாரணமும் கிடைக்காது எனத் தெரிவித்தார்.
கொள்கை ரீதியாகவோ அல்லது அறிவு பூர்வமாகமாகவோ மற்ற கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவினர் முயற்சி செய்கிறார்களா? என கேட்ட கார்த்திக் சிதம்பரம், அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புக்களை ஏவி விட்டு கட்சியை உடைத்து பணம் கொடுத்து இழுக்கிறார்கள். “ஆப்ரேசன் லோட்டஸ்” என்ற பெயரில் தவறான வழியில் கட்சிகளை உடைத்து இழுக்கிறார்கள். இதற்காக வெட்கப்பட வேண்டும் என விமர்சித்தார். எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் முழுக்க முழுக்க பாஜகவுக்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளின் மீது தான் சிபிஐ சோதனை நடத்துகின்றனர் என்றார்.
காங்கிரஸ் கட்சியில் பாராளுமன்றத்தில் குறைந்த உறுப்பினர்கள் தான் உள்ளனர் எனவும் பாராளுமன்றததில் எழுப்ப நினைக்கிற விவாதப்பொருட்களக எழுப்ப அனுமதிப்பதில்லை. அதற்காக காங்கிரஸ் எதிர்கட்சியாக செயல்படவில்லை என கூறிவிடமுடியாது. தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடவு வந்துள்ளதை முழுமையாக ஏற்கிறேன் எனத தெரிவித்தார். மேலும் இந்திபேசும் இந்தியாவில் இந்தி-இந்த்துவா கொள்கை கொஞ்சம் வேரூன்றியிருக்கிறது. இந்துத்துவா கொள்கைகளை எதிர்த்து நாங்கள் வைக்கும் வாதம் இப்போதைக்கு எடுபடவில்லை. அதேநேரத்தில் எதிர்கட்சிகள் ஒரே அணியில் இல்லை எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் எனவும் மக்கள் பிரச்சனைக்கு முழுமையாக குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது எனக்கூறியவர், தமிழகத்தில் மக்கள் பிரச்சனை இருக்கிறதா என்பது தொடர்பான கேளவிக்கு மக்கள் பிரச்சனை இல்லாத நாடே இல்லை எனவும், யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும், அதை பொதுமக்களுக்கு சுட்டிகாட்டிக் கொண்டிருப்பதான் அரசியல் கட்சியின் கடமை எனவும் தெரிவித்தார்.
ஒரு வருடம் நான்கு மாதங்களில் முதல்வரின் செயல்பாடுகளை பொறுத்தவரை மிகவும் சுறுசுறுப்பாகவும் வெளிப்படையாகவும் செயல்படக்கூடிய முதல்வராக இருக்கிறார். மக்கள் எளிதாக அணுகக்கூடிய முதல்வராக செயல்படுகிறார் என தமிழக முதலவர் மு.க. ஸ்டாலினை பாராட்டினார்.