இந்திய டெலிகாம் துறையில் நீயா நானா என்று போட்டி போட்டு கொண்டு 5G சேவையை யார் முதலில் அறிமுகப்படுத்துவது என்ற ஓட்டத்தில் பல முன்னணி நிறுவனங்கள் ஓடி கொண்டிருக்கின்றன.
இதில் முன்னணி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெலை தாண்டி வரிசையில் அடுத்து இருப்பது வோடோபோன் ஐடியா தான். இந்தியாவின் டெலிகாம் துறையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வோடோபோன் ஐடியா நிறுவனமும் 5G சேவைக்கான ஓட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.
முதலில் வருவதை இலக்காக வைக்காமல், குறைந்தபட்சம் அடுத்த ஆண்டுக்குள் 2023-2024 காலகட்டத்திற்குள் வோடோபோன் ஐடியா 5G சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டமிடலில் ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம். ஏற்கனவே 17 முக்கிய இடங்களில் மிட்-பேண்ட் அலைவரிசைகளையும், 16 இடங்களில் mmWave அலைவரிசைகளையும் கொண்டுள்ளதாக அதன் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள வோடோபோன் ஐடியா நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் இது குறித்து விவாதித்துள்ளனர். மேலும் இந்நிறுவனம் பொருளாதர ரீதியாக பின்னடைவை பெற்றுள்ளதகவும் கூறியுள்ளது. எனவே 5G சேவையை துவங்க வெளியிலிருந்து முதலீட்டாளர்கள் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. மேலும் வங்கிகளில் கடன் பெற்றும் நிதி ஆதாரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஏற்கனவே தனிநபரிடமிருந்து வரும் வருவாய் கணக்கான ARPU வோடோபோன் நிறுவனத்திற்கு மிக 128 ரூபாய் என்ற நிலைமைக்கு வந்து விட்டது. இதனால் நிறுவனத்தின் நிதிநிலைமையும் மோசமாக உள்ளது. இதுவே ஜியோ நிறுவனத்திற்கு 179ரூபாய் மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு 183ரூபாய் என்ற நிலையில் உள்ளது. எனவே இந்த வருடத்தில் மீண்டும் வோடோபோன் சேவைகளின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
ஏற்கனவே வோடோபோன் நோக்கியா மற்றும் எரிக்சன் நிறுவனங்களோடு இணைந்து 5G சோதனையை நடத்தினர். தற்போது புதிய 5G சேவைக்கான பணிகளை துவங்காமல் 4Gக்கான கருவிகளை அப்கிரேட் செய்து அதன் மூலம் 5G சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது வோடோபோன்.
மேலும் இந்தியாவில் 4G சேவையை வலுப்படுத்தி வருவதாக கூறியுள்ளனர். கர்நாடகா , ஆந்திரா , பஞ்சாப் ஆகிய பகுதிகளில் மேலும் 4G அலைவரிசையை வாங்கியுள்ளனர். இதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான திட்டமிடலில் உள்ளனர்.
– சுபாஷ் சந்திரபோஸ்