கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே முடிந்த நிலையில், இன்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தும், ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் செல்லும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே கடந்த சில நாள்களாக தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தங்கி ஆதரவாளர்களைச் சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு பாதகமான தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து இன்று மதியம் சென்னை புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என்றார்.
முன்னதாக ஓ.பி.எஸ் ஆதரவாளரான வடசென்னை மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, “பொதுக்குழு தொடர்பாக இதுவரை வழங்கப்பட்ட தீர்ப்புகள் மாறி, மாறி வந்திருக்கின்றன. இரு நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்பும் இறுதியானது அல்ல, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி மேல்முறையீடு செய்வோம்.
மேலும் 2,537 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இருக்கிறது என எண்ணிவிட முடியாது. அ.தி.மு.க-வில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் ஓ.பி.எஸ் பக்கம்தான் இருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பின் மூலம் நாங்கள் சோர்வடைந்துவிட மாட்டோம். இதைவிட இன்னும் எழுச்சியாகத்தான் இருப்போம். எந்த சூழ்நிலையிலும் ஓ.பி.எஸ் பக்கம்தான் இருப்போம்” என்றார்.
இதேபோல ஒ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், “நீதிமன்ற தீர்ப்பை மதிப்பவர் ஓ.பி.எஸ். அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் பட்டியலை கடந்த 29.04.2022 அன்று தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருக்கிறோம். கட்சியை பொருத்தமட்டில் தேர்தல் ஆணையம் கூறுவதையே ஏற்றுக்கொள்ளவேண்டும். அதன்படி தற்போதுவரை ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருக்கின்றனர். அதேபோல கட்சியின் பொருளாளராக ஓ.பி.எஸ் தொடர்கிறார்.
இவர்கள் தலைமையில்தான் நடந்து முடிந்த இரண்டு தேர்தல்களை அ.தி.மு.க சந்தித்தது. மேலும் எடப்பாடிக்கு முதலமைச்சர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து என அனைத்தையும் ஓ.பி.எஸ் வழங்கியிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க-வை அழிக்கும் நடவடிக்கையில் இ.பி.எஸ் ஈடுபடுகிறார். எடப்பாடி பழனிசாமி அதனை கைவிட வேண்டும். ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியில் அமர நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் செயலைப் பார்த்து தொண்டர்கள் வேதனைபடுகின்றனர். நிச்சயமாக ஓ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க வழி நடத்தப்படும். இடைக்கால தீர்ப்பைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது. ஓ.பி.எஸ் இருக்கும்வரை அ.தி.மு.க-வை எந்தக் கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.
ஓ.பி.எஸ் தொகுதியில் எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
இன்று உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமி அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த சட்டமன்றத் தொகுதியான போடியில் எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அ.தி.மு.க விவசாய அணி மாநில துணைத் தலைவர் சேது தலைமையிலான எடப்பாடி ஆதரவாளர்கள் போடி வள்ளுவர் சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து தேவர் சிலை அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “எடப்பாடி பழனிசாமி வாழ்க! பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்க!” என கோஷங்கள் எழுப்பினர்.