கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். மேலும், ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, அப்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் கடந்த ஜூலை 29-ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பையும் விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை `உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம்’ என உத்தரவிட்டனர். அதனால், இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், “அதிமுக-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும். அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் தனித்தனியே நடத்தப்படக் கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஒரு சட்ட ஆணையரைக் கட்சி நியமிக்க வேண்டும். அதேபோல, கட்சி சார்ந்து தனிக் கூட்டம் நடத்தக் கூடாது” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்குப்பின் ஓ.பி.எஸ், ஊடகங்கள் வாயிலாக எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார். ஆனால், எடப்பாடி தரப்பு அதை நிராகரித்து, அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி , சுந்தர் மோகன் அமர்வு, “அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது” என உத்தரவிட்டனர். தனி நீதிபதி உத்தரவு ரத்தானதால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் எடப்பாடி தரப்பினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.