ஜுன் 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதற்கு முந்தைய நிலையே நீடிக்கவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ரத்து செய்துள்ளது.
ஜுன் 23ம் தேதி பொதுக் குழுவில் புதிய அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் ஜுலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என்று அறிவித்தார். இந்த பொதுக்குழுவை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஏற்கவில்லை. அன்றைய தினம் அதிமுக அலுவலகத்துக்குள் பூட்டை உடைத்துக்கொண்டு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நுழைந்தனர். இதையடுத்து ஓ.பி.எஸ் – எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு அலுவலகத்துக்கு அரசு சீல் வைத்தது.
அன்று நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
அத்துடன் இந்தப் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் ஓ.பன்னீர்செல்வம். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று ஆகஸ்ட் 17ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்ததது. இதை விசாரித்த நீதியரசர்கள் துரைசாமி & சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
இதனால், ஜுலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எடப்பாடி அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்