அந்த 3 விஷயங்கள்… நெருங்கிய ஈபிஎஸ், கலங்கிய ஓபிஎஸ்- அதிமுகவின் எதிர்காலம் என்ன?

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து கொண்டிருப்பது ஜனநாயகத்திற்கு கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. ஏனெனில் ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக் காட்டி, ஆரோக்கியமான செயல்பாடுகளை முன்னெடுக்க எதிர்க்கட்சிகள் ஊன்றுகோலாக இருக்க வேண்டும். இதற்கு சிறிதும் நேரமின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறது அதிமுக. தற்போது பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு எடப்பாடி தரப்பிற்கு சாதகமாக வந்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், எடப்பாடி பழனிசாமிக்கு இதுவொரு முன்னேற்றம் தான். தற்போதைக்கு இது வெற்றி என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எடப்பாடி அணியில் இருந்து யாரும் வெளியே போக மாட்டார்கள். நீதிமன்ற தீர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது.

மற்றொரு முக்கியமான விஷயம் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விட்டதால், இன்றைய தேதிக்கு அவர் தான் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர். இதன்மூலம் அவர் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் செல்லுபடியாகும். 1996-97 காலகட்டத்தில் திருநாவுக்கரசர் – ஜெயலலிதா இடையில் மோதல் போக்கு உருவானது. திருநாவுக்கரசு பொதுக்குழுவை கூட்டினார். அவர் பொதுச் செயலாளர் ஆனார்.

அதனை எதிர்த்து ஜெயலலிதா நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு தனி நீதிபதி, நீதிமன்ற அமர்வு என மாறியது. கடைசியில் ஜெயலலிதா பக்கம் தீர்ப்பு வந்தது. அதன்பின்னர் திருநாவுக்கரசு போட்டி அதிமுகவை நடத்தி வந்தார். பேரவை அமைத்தல், கட்சி நிர்வாகிகளை நியமித்தல், இடைத்தேர்தலில் போட்டி வரை சென்றார். சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வாங்கினார். இதை நோக்கி தான் ஓ.பன்னீர்செல்வமும் செல்லக்கூடும்.

அதேசமயம் அதிமுக தன் பக்கம் தான் என்பதில் விடாப்பிடியாக தொடருவார். தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூற வாய்ப்புண்டு. பின்னர் அவரது உத்தரவுப்படி நிர்வாகிகள் நியமனம், போட்டி பொதுக்குழு ஆகியவை அரங்கேறும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் நீதிபதிகள் தீர்ப்பு அதிமுகவில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். அணிகள் இரண்டாக பிரிந்து இரண்டு அதிமுகவாக போன்று தோற்றமளிக்கும். இத்தகைய சூழலில் யார் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். அவர்கள் கையில் இருக்கும் ஆயுதம் பெரும்பான்மை யார் பக்கம் என்பது தான்.

இதில் மூன்று விஷயங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஒன்று யார் பக்கம் எத்தனை எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் இருக்கிறார்கள் என்பது. இரண்டாவது கட்சி நிர்வாகிகள் யார் பக்கம் எத்தனை பேர். மூன்றாவது கட்சியின் சட்ட விதிமுறைகள்.
அதிமுகவில் நீடிக்கும் குழப்பங்கள் எத்தனை மாதங்கள் நீண்டு கொண்டே சென்றாலும்,

இறுதியில் எடப்பாடி தரப்பின் கையே ஓங்கி நிற்க வாய்ப்புண்டு. ஆனால் அதுவரை எதிர்க்கட்சியாக அதிமுகவின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். இது ஜனநாயகத்திற்கு சரியானதல்ல. அதுமட்டுமல்ல வரக் கூடிய தேர்தல்களில் அதிமுக வாக்கு வங்கி பிளவுபடும். இது மற்ற கட்சிகளுக்கு சாதகமாக முடிய அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.