அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 20% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் என உயர்கல்வித்துறை ஆணை அறிவித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறபட்டு வருகிறது . கிராமங்கள், நகராட்சிகள் மற்றும் பிற்படுத்தபட்ட, பழங்குடியின மாணவ, மாணவிகள் அரசு கல்லூரிகளில் சேர அதிகளவில் ஆர்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க இயலாத சூழல் நிலவுகிறது .
இதன் அடிப்படையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து உயர்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. அந்த ஆணையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் 20% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் எனவும், அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15% வரை கூடுதல் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் எனவும், தனியார் கல்லூரிகள் 10% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அது சார்ந்த பல்கலைகழகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கல்லூரிகளில் கூடுதல் சேர்க்கைக்கு, கூடுதல் பணியிடங்கள் கோரக்கூடாது எனவும் , பல்கலைக்கழகங்களின் ஒப்புதல் பெற்று சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
உயர்கல்வி துறையின் இந்த அறிவிப்பு அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வழி செய்துள்ளது.