திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் மலையாளம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு சமீபத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் முதல்வர் பினராய் விஜயனின் தனிச் செயலாளர் கே.கே. ராகேஷின் மனைவி ப்ரியா வர்கேஷி இடம் பெற்றிருந்தார். இது குறித்து புகார் வந்ததும், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அதற்கு தடை விதித்தார்.
இதையடுத்து பல்கலைக்கழக சட்டத்தில் கேரள அரசு திருத்தம் செய்தது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படும் அதிகாரம் அதில் குறைக்கப்பட்டன. இந்த சட்ட திருத்த மசோதா கேரள சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதுகுறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் கூறுகையில், “இந்த மசோதா, மாநிலத்தின் உயர்கல்வித் துறைக்கு அவமதிப்பு போன்றது. இந்த மசோதா பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை பாதிக்கும். உயர் கல்வி துறையில் தவறான முன்மாதிரியை ஏற்படுத்தும்” என்றார்.