லிஸ்பன்: போர்சுக்கல் நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்திய கர்ப்பிணிப் பெண் மருத்துவ வசதி குறைபாடுகளால் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மார்த்தா டெமிடோ செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது:
போர்ச்சுகலுக்கு சுற்றுலா வந்த இந்திய கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தலைநகர் லிஸ்பனில் உள்ள சாண்டா மரியா மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அந்த மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கான போதிய வசதிகள் இல்லாததால் சாவ் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு அந்த கர்ப்பிணிப் பெண் மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் 722 கிராம் எடையில் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த இந்தியப் பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்தியப் பெண் பிரசவத்தின்போது உயிரிழந்ததற்கு காரணம் அவசர கால மகப்பேறு மருத்துவ சேவைகளை தற்காலிகமாக மூட சுகாதாரத் துறை அமைச்சர் மர்த்தா டெமிடோ எடுத்த முடிவுதான் காரணம் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, இந்தியப் பெண் உயிரிழந்த ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு போர்ச்சுகல் சுகாதாரத் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரைத் தவிர மாநில சுகாதாரத் துறையின் செயலர்கள் ஆன்டானியோ லாசெர்டா மற்றும் மரிடா டி பாத்திமா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இவ்வாறு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.