`இந்த தீர்ப்பு இபிஎஸ்-க்கு அரசியல் வெற்றியாக அமையும்’- அரசியல் விமர்சகர் கருத்து

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில் ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் புதிய தலைமுறை சார்பாக பேசினோம். நம்மிடையே பேசிய அவர், “தனி நீதிபதி தீர்ப்பை பொறுத்தவரை, பொதுக்குழுவை கூட்டும் நடைமுறையையும், அதிலிருந்த சாராம்சங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு அவர் தீர்ப்பு கூறியிருந்தார். அதை இந்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
image
உண்மையில் `Democracy is essence’ – என்பது, நீதிபதிக்கு நீதிபதி வேறுபடும் விஷயம்தான். ஆக ஒரு வழக்கை, ஒரு நீதிபதி அவர் பார்வையில் இருந்து அணுகுவார். மற்றொருவர், வேறொரு பார்வையிலிருந்து அணுகுவார். மற்றபடி சட்ட நுணுக்கம் என்றெல்லாம் இதை நாம் பார்க்க வேண்டியதில்லை. சட்டத்திலிருக்கும் நடைமுறை சிக்கல் இது. இக்காரணத்தினால், மேல்முறையீடு என்றொரு நடைமுறையே சட்டத்தில் உள்ளது. அந்தவகையில் ஓபிஎஸ் தரப்பு இந்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செல்லும் வாய்ப்புள்ளது.
அதற்கு முன் இப்போதைக்கு இந்த தீர்ப்பை, இபிஎஸ்-க்கான அரசியல் வெற்றியென்றே பார்க்க வேண்டும். ஏனெனில் இப்போதைக்கு அவர்தான் அதிமுக பொதுச்செயலாளர். இந்த நேரத்தில் தேர்தல் ஆணையம் நேற்று ஆர்.டி.ஐ. கேள்விக்கு அளித்த பொதுக்குழு ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். அந்த பதில் என்னவெனில், `ஜூலை 11 பொதுக்குழு, அதற்கு முன் நடந்த பொதுக்குழு, அதற்கு முன்பும் நடந்த செயற்குழு என எது குறித்தும் இன்னும் முடிவெடுக்கவில்லை.
image
எல்லாமே பரீசிலனை அளவில்தான் உள்ளது’ என்பதுதான். ஆக, தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் – இபிஎஸ் என யார் பக்கமும் இல்லை. தேர்தல் ஆணையம் யார் பக்கம் இருக்கிறதோ, அவருக்கு தான் தேர்தலில் வாய்ப்பு. அவர்தான் தேர்தலில் அதிமுக பெயரிலும், அதிமுக சின்னத்திலும் போட்டியிட முடியும். ஆகவே அதில்தான் இப்போது இருவரும் கவனம் செலுத்த வேண்டும்.
`பொதுக்குழு செல்லும், இபிஎஸ்தான் பொதுச்செயலாளர்’ என்ற இன்றைய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை, ஓபிஎஸ் தரப்பு எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு செல்லக்கூடும். அப்படி செல்கையில், உச்சநீதிமன்றம் ஒருவேளை இபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினால், தேர்தல் ஆணையம் இபிஎஸ்-க்கு சாதகமாக அமையக்கூடும். ஆக இப்போதைக்கு இன்றைய தீர்ப்பு இபிஎஸ்-ன் அரசியல் வெற்றி தான்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.