அ.தி.மு.க பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நம்மையெல்லாம் வாழவைத்த புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் அ.தி.மு.க கழகத் தொண்டர்களையும், தீய சக்தி, விடியா தி.மு.க அரசின் அராஜகத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.
இந்த அரும் பணிகளுக்குத் தடையாக, உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநல விஷமிகள், தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க, தூய்மையான மனதுடன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி, கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றிருக்கிறது.
23.6.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லும். 11.7.2022 அன்று கழக சட்ட விதிகளின்படி நடைபெற்ற சிறப்பு கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அறிவிப்புகளும், முடிவுகளும் செல்லும் என உயர் நீதிமன்ற பெஞ்ச் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடு துணை நின்ற தலைமைக் கழக நிர்வாகிகள் உட்பட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.