உச்ச நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்து கூறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தின் சமீபகால தீர்ப்புகளை விமர்சித்து பேசியிருந்தார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். அதில், ”உச்ச நீதிமன்றம் சென்றால் நீதி கிடைக்கும் என நீங்கள் நம்பினால் அது அவநம்பிக்கை, நீதிமன்ற தீர்ப்பிற்கும் யதார்த்தத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது எனது 50 ஆண்டுகால அனுபவத்திலிருந்து இதனை நான் கூறுகிறேன்” உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக கபில் சிபல் பேசியிருந்தார். மேலும் ”முக்கியமான சர்ச்சைக்குரிய வழக்குகள் என்றால் ஒரு சில நீதிபதிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றது, அத்தகைய நீதிபதிகள் இந்த மாதிரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்பதை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்” உள்ளிட்ட பல காட்டமான கருத்துகளை உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக அவர் கூறியிருந்தார்.
இதற்காக கபில் சிபல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கூறி வழக்கறிஞர் வினித் ஜிந்தால் என்பவர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபாலிடம் முறையிட்டிருந்தார். தற்போது அந்த கோரிக்கையை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் நிராகரித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM