ராஞ்சி: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகருக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடத்தப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் சிறியது முதல் பெரிய சைஸ்களால் ஆனது வரை விற்பனை செய்யப்படும். இதில் அச்சு பிள்ளையார், பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்படும் பிள்ளையார், விக்கிரகம் உள்ளிட்டவை விற்பனையாகும்.
கொரோனா
கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பிள்ளையார் சதுர்த்தி விழாக்கள் களையிழந்திருந்தன. ஆனால் கொரோனா ஊரடங்கு முடிந்து தொற்றும் பெரிய அளவில் இல்லாததால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது.
விநாயகர் சிலைகள்
ஆண்டுதோறும் விநாயகர் சிலைகளை செய்வதில் கலைஞர்கள் புதுமையை புகுத்தி வருகிறார்கள். சிட்டி பிள்ளையார், ரோபோ பிள்ளையார், பாகுபலி பிள்ளையார் என காலமாற்றத்திற்கேற்ப புதுமையை கொண்டு வந்தனர். இந்த முறை புஷ்பா பிள்ளையார், ஆர்ஆர்ஆர் பிள்ளையார், ஜெயிலர் பிள்ளையார்கள் விற்பனைக்கு வந்தன.
புஷ்பா
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் சந்தன மரங்களை கடத்தும் கேரக்டரில் அல்லு நடித்திருந்தார். பிள்ளையாரும் வெள்ளை நிற உடை அணிந்து கொண்டு சந்தனமரக் கட்டையில் அமர்ந்திருக்கிறார். அது போல் ராம்சரண் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணின் கேரக்டரான வில் அம்புடன் இருக்கும் பிள்ளையாரும் ஓடி வருவது போல் போஸ் கொடுக்கிறார்.
ரஜினிகாந்த் ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் போஸ்டரில் ரஜினிகாந்த் காக்கி பேண்ட் அணிந்து கொண்டு ஸ்டிர்க்ட்டாக நிற்பதைபோன்றும் கணபதி உருவாக்கப்பட்டுள்ளார். ஆனால் இவை எல்லாவற்றையும் விட வித்தியாசமான சம்பவம் ஜார்க்கண்டில் நடைபெற்றுள்ளது.
ஜாம்ஷெட்பூர் மாவட்டம்
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் விநாயகருக்கு ஆதார் அட்டை வடிவில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதில் அவரது பெயர் ஸ்ரீ கணேஷ், தகப்பனார் பெயர் மகாதேவ், கைலாஷ் பாரபட், இருக்கிறதிலேயே மேல் மாடி, மானசரோவர் ஏரி அருகே, கைலாஷ்- 000001 என கொடுக்கப்பட்டுள்ளது.
செல்பி
அது போல் அவரது பிறந்த நாள் என 01/01/600CE என குறிப்பிடப்பட்டிருந்தது. கணேஷாவின் ஆதார் அட்டை எண் என 9678 9959 4584 என இருந்தது. இந்த பேனருடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஆதார் அட்டை இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதாவது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கட்டாயம் எனும் நிலையில் பிள்ளையாரும் ஆதார் அட்டை “வைத்திருப்பது” அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.