எழுத்தாளர் அருந்ததி ராயின் தாயாரும் புகழ்பெற்ற கல்வியாளருமான மேரி ராய் காலமானார்!

அதிகார அரசியல், ஏகாதிபத்திய ஜனநாயகம், வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ் (Walking with the comrades) போன்ற புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் அருந்ததி ராயின் தாயாரும் புகழ்பெற்ற கல்வியாளருமான மேரி ராய் வயது மூப்பின் காரணமாகத் தனது 89 வயதில் நேற்று காலமானார். அவரின் இறுதிச்சடங்குகள் இன்று காலை 11 மணியளவில் கோட்டயத்தில் நடைபெற்றது. அதற்கு முன் அவரது உடல் நேற்று மாலை 3 மணி முதல் இன்று காலை 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

மேரி ராய், 1933-ல் சிரிய கிறித்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் டெல்லியிலும், சென்னையில் உள்ள குயின்ஸ் மேரி கல்லூரியிலும் தனது படிப்பை முடித்திருக்கிறார்.

மேரி ராயின் திருமண வாழ்க்கை மிகக் குறுகிய காலத்திலேயே முறிந்துபோனதால் அவரது சொந்த ஊரான கோட்டயத்திற்குச் சென்று அங்கு 1961-ல் ‘பள்ளிக்கூடம்’ என்ற பெயரில் தனது சொந்தப் பள்ளியைத் தொடங்கினார்.

மேரி ராய், அருந்ததி ராய்

மேரி ராய் ஒரு கல்வியாளர் மட்டுமல்ல சமூக சீர்திருத்தப் போராளியும்கூட. அவரது 39 ஆண்டுக்கால சட்டப் போராட்டமே, 1916-ம் ஆண்டின் தொன்மையான திருவிதாங்கூர் கிறித்தவ வாரிசுச் சட்டத்திற்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வழிவகுத்தது. அவர் தொடுத்த வழக்கில் கிடைத்த தீர்ப்புதான் அனைத்து கிறித்தவப் பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சமமான பங்களிப்பை உறுதி செய்தது.

“என் மகள் அருந்ததிக்குச் சிறுவயது முதல் கிடைத்த சுதந்திரம் இன்று இலக்கிய நட்சத்திர அந்தஸ்தை அடைய உதவியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில், உங்களின் மகனையோ மகளையோ சுதந்திரமாக இருக்கவிடுவது பாவம் எனக் கருதப்பட்டது. ஆனால் அவர்களின் உரிமைகளுக்காக நான் அதைச் செய்தேன். சுதந்திரமாக இருக்க விடுவதால் மட்டுமே உங்கள் மகன்களும் மகள்களும் முன்னேறுவார்கள் என்பதை நான் உறுதியாக உணர்கிறேன். அதற்கு என் அருந்ததி ஒரு உதாரணம்” என்று ஒரு பேட்டியில் அடுத்த தலைமுறைக்கான சுதந்திரம் மற்றும் பிள்ளைகள் வளர்ப்பு பற்றிக் கூறியிருக்கிறார் மேரி ராய்.

சமூக சீர்திருத்தப் போராளியான மேரிராயின் இறப்பிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.