ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக செப்டம்பர் 6ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் செப்டம்பர் 8ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6ம் தேதி மாலை முதல் நடை திறக்கப்பட்டு செப்டம்பர் 10 ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கால சிறப்பு பூஜைகள் நடக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மலையாள மற்றும் தமிழ் மாதத்தின் முதல் நாள் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டு ஐந்து நாட்கள் பூஜை நடைபெறும். இது தவிர மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 60 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். மேலும் கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க ஓணம் பண்டிகைக்காகவும் ஆண்டுதோறும் நடை திறக்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சபரிமலை நடை வரும் 6ஆம் தேதி திறக்கப்பட்டு, செப்டம்பர் 10 ஆம் தேதி வரை ஓணம் பண்டிகைக் கால சிறப்பு பூஜைகள் நடைபெறும் என சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை முன்னிட்டு செப்டம்பர் 6ஆம் தேதி துவங்கி 10ஆம் தேதி வரை தினமும் நெய் அபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கும் எனவும், அதோடு ஓணம் பண்டிகை நாளான செப்டம்பர் 8ஆம் தேதியன்று திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழ் மாதத்தின் புரட்டாசி மாதம் மற்றும் மலையாள மாதத்தின் கன்னி மாதம் ஆகிய மாதாந்திர பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் செப்டம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில் இதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு சபரிமலை அடிவாரம் நிலக்கல்லில் சிறப்பு மையங்கள் துவங்கப்பட்டு பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM