சென்னை: கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிய பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “வரலாற்று சிறப்புமிக்க அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சிக் கொள்ளத்தக்க ஒரு தீர்ப்பினை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பில் இரண்டு முக்கியமான விஷயங்கள், ஜூலை 11-ம் தேதியன்று கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு சட்டப்படி செல்லும். தனிநீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்ப்பை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் வரவேற்கும் விதமாக இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அங்கீகாரத்தை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஒற்றைத் தலைமை என்ற அங்கீகாரத்தை உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பது, வரவேற்க தகுந்த மகிழ்ச்சியளிக்கக்கூடி நல்ல தீர்பபாகும்.
கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு சட்டப்படி நடைபெற்றுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதால், ஓபிஎஸ் நீக்கம் செல்லும்” என்று அவர் கூறினார்.
முன்னதா, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் இல்லத்தின் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். தீர்ப்பைத் தொடர்ந்து வீட்டின் வெளியே காத்திருந்த தொண்டர்களைச் சந்தித்து இபிஎஸ் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.