கண்டுகொள்ளாத மோகன்லால் : விரக்தியில் சீனியர் இயக்குனர்
மலையாள திரையுலகில் எண்பது தொண்ணூறுகளில் மிகப்பெரிய கமர்சியல் இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் சிபி மலயில். குறிப்பாக மோகன்லால், மம்முட்டி ஆகியோரை வைத்து மாறிமாறி படங்களை இயக்கியவர். மோகன்லால் நடித்த உஸ்தாத், கிரீடம், தசரதம், செங்கோல் என பல ஹிட் படங்களை கொடுத்த இவர், வழக்கமாக சீனியர் இயக்குனர்கள் திரையுலகில் இருந்து ஒரு கட்டத்தில் பார்ம் இழந்து ஒதுக்குவது போல படங்கள் இயக்காமல் ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் மோகன்லால் மீது இவர் வருத்தத்தோடு இருப்பதை ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது 1989ல் மோகன்லாலை வைத்து தசரதம் என்கிற ஹிட் படத்தை இயக்கினார் சிபி மலயில். அந்த படத்திற்கு மறைந்த இயக்குனரும் கதாசிரியருமான லோகிததாஸ் கதை எழுதியிருந்தார். சிபி மலயில் கூட்டணியில் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு லோகிததாஸ் தான் கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் தசரதம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என சில வருடங்களுக்கு முன்பு மோகன்லாலிடம் கூறிய சிபி மலயில், அதன் அவுட்லைனையும் மோகன்லாலிடம் விவரித்துள்ளார்.
நிச்சயமாக இந்த படத்தை எடுக்கலாம் என்று அப்போது நம்பிக்கை அளித்த மோகன்லால், அதன்பிறகு அந்த படம் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை என்று கூறும் சிபி மலயில், சிலமுறை சூசகமாக அதை உணர்த்தியும் மோகன்லால் கண்டு கொள்ளவில்லை என்பதால் இனி மோகன்லால் அவராகவே கூப்பிட்டால் மட்டுமே இந்த படம் பற்றி பேசுவேன் என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.
மம்மூட்டி-ஜோஷி, ஜெயராம்-ராஜசேனன், ஏன் மோகன்லால்- பிரியதர்ஷன் என நட்பு கூட்டணியாக இருப்பவர்கள் கூட சில படங்கள் ஓடவில்லை என்றால் ஒரு கட்டத்தில் பிரிவது இயல்புதான் என்று கூறியுள்ள சிபி மலயில் என்னதான் மோகன்லாலுக்கு பிரியதர்சன் ஆஸ்தான இயக்குனர் என்றாலும் கூட, மோகன்லால் முதல்முறையாக தயாரிப்பு நிறுவனம் துவங்கியபோது அதன் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்கு தான் அளித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.