ஸ்ரீரங்கம் கோயில் முன் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அருகே மதுரவாயலில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி, இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசாரப் பயணம் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலருமான கனல் கண்ணன் கலந்து கொண்டு பெரியார் குறித்து அவதூறாக பேசினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் எதிரே உள்ள பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் என்று அவர் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், கனல் கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, சைபா் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரி விடுதியில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை, ஆக. 15-ஆம் தேதி சென்னை சைபர் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கில் கனல் கண்ணன் ஜாமீன்கோரி, சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கனல் கண்ணன் ஒரு கட்சியில் இருக்கும்போது மாற்றுக் கருத்து கொண்டவர்களை குறித்து ஏன் பேச வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற தேவையற்ற கருத்துகளை யூடியூபில் பேசுவது பேஷனாகிவிட்டதாக தெரிவித்த நீதிபதி, கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, விசாரணை அதிகாரி முன் 4 வாரங்களுக்கு இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“