பெங்களூரு: கர்நாடகாவில் மத ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்துக்களுடன் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக கர்நாடகாவில் மத ரீதியான மோதல்கள் அதிகரித்துள்ளதால் பல இடங்களில் பொது அமைதி பாதிக்கப்பட்டிருக்கிறது. குடகு, ஷிமோகா, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் சாவர்க்கர் படம் வைக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள என்.ஆர்.புரா அருகேயுள்ள ராஜீவ் நகரில் இந்து மக்களுடன் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடி உள்ளனர். சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து விநாயக சேவா சங்கத்தின் தலைவர் ஜூபேதா கூறியதாவது: நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவன். கடந்த 13 ஆண்டுகளாக ஆர்.என்.புரா நகர பஞ்சாயத்து தலைவராக இருக்கிறேன். இங்கு நீண்ட காலமாக அனைத்து மதத்தினரும் இருப்பதால் நகர பஞ்சாயத்து சார்பில் அனைத்து மத விழாக்களையும் கொண்டாடி வருகிறோம்.
கடந்த 13 ஆண்டுகளாக நான் விநாயக சேவா சங்கத்தின் தலைவராக இருக்கிறேன். எனது தலைமையில் 20 பேர் கொண்ட குழுவில் 3 முஸ்லிம் உறுப்பினர்கள், 2 கிறிஸ்தவ உறுப்பினர்கள் உள்ளனர். எங்களது நகரத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை 3 நாட்கள் கொண்டாட முடிவெடுத்தோம். இதற்காக அனைத்து மதத்தைச் சேர்ந்த குடும்பத்தினரிடமும் நிதி வசூலித்து, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தோம்.
புதன்கிழமை விநாயகர் சிலை நிறுவப்பட்டு, பூஜை மேற்கொள்ளப்பட்டது. வெள்ளிக்கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆர்.என்.புரா ஏரியில் கரைக்க இருக்கிறோம். இந்த நிகழ்வில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர். இதன் மூலம் எங்களது நகரில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சமூக நல்லிணக்கத்துடன் வாழலாம் என்ற செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்
இதேபோல மண்டியா மாவட்டத்திலும் இந்து மக்களுடன் முஸ்லிம்களும் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை நல்லிணக்கத்துடன் கொண்டாடினர். 18-வது ஆண்டாக நடைபெறும் இந்த சமூக நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி விழாவில் முஸ்லிம் மக்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கடைசி 3 நாட்கள் முஸ்லிம் குடும்பங்களின் சார்பில் விநாயகருக்கு பூஜை நடத்தப்பட இருக்கிறது.
சிக்கமகளூரு, மண்டியா மாவட்டங்களில் நடைபெற்ற இந்த சமூக நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.