“கல்குவாரிகளில் தவறு நடந்திருந்தாலும் மன்னிக்கத் தயார்!" – அமைச்சர் துரைமுருகன்

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் அதிகாரிகளோடு அது குறித்து ஆலோசனை நடத்தவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருநாள் பயணமாக நெல்லை மாவட்டம் வந்தார். முதல் நாளில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த நீர்வளத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வுப் பணி

இந்த நிலையில், இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான தாமிரபரணி-நம்பியாறு-கருமேணியாறு இணைப்புத் திட்டம் தொடர்பாக திடியூர் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளைப் பார்வையிட்டார். அத்துடன், பச்சையாறு அணைக்கட்டுப் பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

நீர் நிலைகளில் நடக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், ”கடந்த பத்தாண்டு காலத்தில் அரசு அலுவலகங்கள் எந்தப் பணிகளும் நடக்கவில்லை. அதிகாரிகளுக்கு அவர்களின் பணிகளே மறந்துவிட்டன. அதனால் நான் அமைச்சர் பொறுப்பேற்றதும் நீர்வளத்துறையில் உள்ள அதிகாரிகள் அனைவருக்கும் சிறப்புப் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தேன்.

பேட்டியளித்த துரைமுருகன்

கலைஞர் முதல்வராக இருந்தபோது நான் அமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்டது, தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டம். இப்போது நான் மீண்டும் அமைச்சராக இருக்கும் காலம் வரை இந்தப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. நான் தொடங்கி வைத்த திட்டத்தை நானே திறக்கவேண்டும் என விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் இரு கட்ட பணிகள் நூறு சதவிகிதம் முடிவடைந்து விட்டன. மூன்றாம் கட்ட பணிகள் 99 சதவிகிதம் முடிவடைந்து விட்டன. நான்காம் கட்ட பணிகளும் வேகமாக நடந்து வருவதால், 58 சதவிகிதம் பணிகள் நிறைவுபெற்று விட்டன. அதனால் வரும் 2023-க்குள் இந்தப் பணிகள் அனைத்தும் முழுமை பெற்று நதிநீர் இணைப்பு திட்டம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.

பச்சையாறு அணைக்கட்டு

முதல்வர் கேரளா சென்றிருக்கும் நிலையில், முல்லைப்பெரியாறு விவகாரம் தொடர்பாகப் பேசுவாரா என்று கேட்கிறீர்கள். முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து இனி பேசுவதற்கு எதுவும் கிடையாது. ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்டன. அதனால் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்.

நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகள் மூடி இருப்பதால் பல தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கல்குவாரிகளில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த சுரங்கங்களுக்குச் சிறிய அளவில் அபராதம் விதித்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவித்திருந்தேன்.

தடுப்பணையில் ஆய்வு

ஆனால், கல்குவாரி நிர்வாகத்தினர் நீதிமன்றத்துக்குப் போய்விட்டதால் எதுவும் செய்ய முடியவில்லை. கல்குவாரிகளில் தவறு நடந்திருந்தாலும் அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலைமையை நினைத்து மன்னிப்பதற்குத் தயாராக உள்ளோம். ஆனால் நான் இரண்டு நாள்கள் இங்கு இருந்தும்கூட கல்குவாரி தொடர்பாக யாரும் என்னை வந்து சந்தித்து கோரிக்கை மனு எதுவும் கொடுக்கவில்லை” என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.