புதுடெல்லி: வரும் அக். 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதால், வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்களின் ெபயர் பட்டியலை வெளியிடுமாறு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 19ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளிநாடு சென்றுள்ள நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த தலைவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடாத பட்சத்தில் மூத்த தலைவர்கள் சிலர் களம் இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவிற்கு சசிதரூர் எழுதியுள்ள கடிதத்தில், ‘காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் பணிக்குழு வெளியிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த 2001ல் நடந்த காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் 9,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டது. அதனால், தற்போது மேற்கண்ட 9,000க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயரை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.