குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸார் தற்போது செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (01) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 31ஆம் திகதி முதலாவது சம்பவம் பதிவாகியுள்ளது. இதுவரை 26 மனித கொலைகள், இடம்பெற்றுள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை. இவை இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை. இந்த அமைப்புக்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவது, பண மோசடி போன்ற காரணங்களால் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டம் தொடர்பான அனைத்து நிறுவனங்களும் இந்தச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தச் சம்பவங்களுக்கு ஆதரவான அனைத்து நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியுமிடத்து 118, 119 மற்றும் 1997 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.