போபால்: மத்தியபிரதேச நிறுவனத்தில் சரியாக சம்பளம் தராத நிறுவனத்தில் பணியாற்றிய 7 தொழிலாளர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சமையல் பாத்திரங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் குறிப்பிட்ட சில தொழிலாளர்கள் பங்கங்காவில் உள்ள மற்றொரு தொழிற்சாலைக்கு இடம் மாற்றப்பட்டனர். இந்நிலையில் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 7 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். அதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி அஜய் சிங் குஷ்வாஹா கூறுகையில், ‘தொழிலாளர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் அவர்களில் சிலர் விஷம் குடித்துள்ளனர். ஆபத்தான கட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் மீண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.