செல்போனில் பேசி பிரசவம்.. நர்சும் ஆயம்மாவும் அமுக்கியே குழந்தைய கொன்னுட்டாங்க..! கண்ணீரில் தவிக்கும் பெண்..!

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்க வேண்டிய பெண் மருத்துவர் பணிக்கு வராமல் செல்போனில் சொன்னதை கேட்டு  நர்சும் ஆயாவும் சேர்ந்து வயிற்றை அமுக்கி பிரசவம் பார்த்ததால் ஆண் குழந்தை உயிரிழந்து விட்டதாக பெண் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சிலம்பி மங்கலத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெபராஜ் இவரது மனைவி ஜெசி ஜெனிபர். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அதிகாலை 4 மணிக்கு புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு மருத்துவர் எவரும் இல்லாத சூழலில், ஒரே ஒரு நர்சு மட்டும் இருந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே அங்கு தான் மருத்துவ சோதனை செய்து வந்ததால் அங்கேயே ஜெஸி ஜெனிபரை அனுமதித்துள்ளனர். காலை 8 மணிக்கு பிரசவ வலி அதிகமான நிலையில் பணிக்கு வர வேண்டிய மருத்துவர் சுகன்யா பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது.

இதையடுத்து மருத்துவர் சுகன்யா செல்போனில் சொன்னதை கேட்டு நர்ஸ் ரேகா, தமிழ்செல்வி ஆகியோர் பிரசவம் பார்க்க தொடங்கியதாகவும் உதவிக்கு வீரம்மாள்,ஆராயி ஆகிய இரு ஆயாக்கள் உடனி ருந்த நிலையில் காலை 11:15 மணிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர் விஷ்ணு பிரியாவை அழைத்து வந்து காண்பித்துள்ளனர். அவர் உயிர்காக்கும் பச்சிளம் குழந்தைக்கான ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார்.

அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்து விட்டு குழந்தை பிறக்கும் போதே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஜெஸி ஜெனிபரை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளானர்.

இதர்க்கிடையே செல்போனில் பிரசவம் பார்க்க அறிவுறுத்திய மருத்துவர் சுகன்யாவும், நர்சு மற்றும் ஆயாக்கள் வயிற்றின் மீது அமுக்கியே தனது ஆண் குழந்தையை கொன்று விட்டதாக, குழந்தையை பறிகொடுத்த பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

மெத்தனமாக சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் சுகன்யா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெசி ஜெனிபரின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.