புதுடெல்லி: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவும் தனது தலைமையிலான அரசை கவிழ்க்கவும் பாஜக சதி செய்வதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில் ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் அனைவரும் அவருடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் டெல்லி சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை அவையின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இத்தீர்மானம் மீது சட்டப்பேரவையில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் 62 பேரில் 58 பேர் குரல் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இல்லாதால் நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் கேஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அர்விந்த் கேஜ்ரிவால் பேசியதாவது: பாஜகவின் ஆபரேஷன் தாமரை திட்டம் தோல்வி அடைந்துள்ளது. ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை அவர்களால் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதை இன்று நிரூபித்துள்ளோம். துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது முதல் குஜராத்தில் ஆம் ஆத்மியின் வாக்கு வங்கி 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
சிசோடியாவை கைது செய்ய விரும்பும்போது, ‘சொல்லுங்கள். நானே வருகிறேன்’ என்று அதிகாரிகளிடம் சிசோடியா கூறியுள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்படலாம். இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.