ட்ரெண்டிங் போட்டி: ட்விட்டரில் களம் இறங்கிய தலைவர்கள்; ஸ்டாலினின் திராவிடம் vs இ.பி.எஸ்-சின் தமிழ்நாடு

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் ‘திராவிடம்’ என்று பதிவிட்ட ஓரிரு மணி நேரத்திலேயே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விடர் பக்கத்தில் ‘தமிழ்நாடு’ என்று பதிவிட்டுள்ளார். திராவிடம் vs தமிழ்நாடு ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்த்தேசியம் என்றும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமூகநீதி என்றும் பதிவிட்டு ஒற்றை வார்த்தை ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளனர்.

தமிழ்நாட்டை அரை நூற்றாண்டுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. தமிழக அரசியலில் அதிமுக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியாக இருக்கிறது. திமுகவும் அதில் இருந்து பிரிந்த அதிமுகவும், திராவிடக் கட்சிகளாக அடையாளம் காணப்பட்டாலும் திமுகவும் அதிமுகவும் பரம எதிரிகளாகவே இருந்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களின் காலத்தில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சியின் கருத்துகளைப் பரப்ப சமூக ஊடகங்களை சிறப்பாகக் கையாளுகிறார்கள். குறிப்பாக ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்வதில் தமிழக அரசியல் கட்சிகளை அடித்துக்கொள்ளவே முடியாது.

இந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ‘திராவிடம்’ என்று பதிவிட்டு ஒற்றை வார்தை ட்ரெண்டிங்கில் இணைந்தார். ஸ்டாலின் ‘திராவிடம்’ என்று பதிவிட்ட ஓரிரு மணி நேரத்திலேயே அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘தமிழ்நாடு’ என்று பதிவிட்டு ஒற்றை வார்த்தை ட்ரெண்டிங்கில் போட்டியாக களம் இறங்கியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்-ம் பதிவிட்ட ஒற்றை வார்த்தைகள் திராவிடம் vs தமிழ்நாடு என்று போட்டியாக மாறி வருகிறது. அதை அவரவர் கட்சி ஆதரவாளர்கள் லைக் செய்து ரீ ட்வீட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

ஏற்கெனவே, தமிழகத்தில் தீவிர தமிழ்த் தேசிய அரசியலைப் பேசும் அரசியல் இயக்கங்கள், தலைவர்கள் திராவிடத்தை எதிராக நிறுத்தி தமிழ்த்தேசியம் தமிழ்நாடு என்று கூறி வரும் நிலையில், இரண்டு திராவிடக் கட்சிகளின் தலைவர்களான, ஸ்டாலின் திராவிடம் என்றும் இ.பி.எஸ் தமிழ்நாடு என்றும் பதிவிட்டிருப்பது தமிழக அரசியலில் எதிர்நிலைகளை எழுப்புவதாக உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் திராவிடம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்-ம் தமிழ்நாடு என்றும் பதிவிட்டு போட்டியைத் தொடங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘தமிழ்த்தேசியம்’ என்று பதிவிட்டு ஒற்றை வார்த்தை ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளார். அதே போல, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘சமூகநீதி’ என்ற வார்த்தையைப் பதிவிட்டு அவரும் ஒற்றை வார்த்தை ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளார்.

இவ்வாறு ட்விட்டரில் ஒற்றை வார்த்தை ட்ரெண்டிங்கில் ஸ்டாலின், இ.பி.எஸ், சீமான், ராமதாஸ் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் களம் இறங்கியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.