தஞ்சையில் தொடர் மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 1,000 ஏக்கர் குறுவை பயிர் சேதம்: விவசாயிகள் கவலை

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 1,000 ஏக்கர் குறுவை பயிர்கள் சேதமடைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டிய மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி அதிக அளவில் நடைபெற்றது.

தற்போது முன்பட்ட குறுவை அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. நேற்று மதியம் 3 மணி வரை விட்டுவிட்டு மழை பொழிந்தது. இன்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர் மழையால் நெல் அறுவடை பணிகள் தாமதமாகின. பல இடங்களில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில்  மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. பிரந்தை, கீழகளக்குடி, மேலகளக்குடி, ஆலங்குடி, கொத்தங்குடி, அன்னத்தோட்டம், புலவர்நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை சாகுபடி செய்த நெற்பயிர்கள் 1000 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்தது.  இந்த நெற்பயிர்கள் மழையால் பல ஏக்கர்களில் சாய்ந்து, முளைக்கத் தொடங்கி விட்டன.

மேலும் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதாலும், வடிவதற்கு தாமதம் ஆவதாலும் இந்த பயிர்கள் இனி தேறுவது கடினம் என்பதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.