தலைக்கு விலை 25 லட்சம்… சிக்குவாரா தாவூத் இப்ராஹிம்?

1993 மார்ச் 12… ஒட்டுமொத்த உலகையே உலுக்கிய அந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம், இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையில் நிகழ்த்தப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த கொடூர சம்பவத்தில் மொத்தம் 250க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். 750க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக கருதப்படும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் நிழல் உலக தாதாவான தாவூக் இப்ராஹிம் மூளையாக செயல்பட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அத்துடன் இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாக தாவூத்தின் கூட்டாளிகளான சோட்டா ஷகீல், ஷாஜி அனிஸ் ஜாவித் சிக்னா, டைகர் மேமன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவாகி உள்ளது.

இந்த வழக்குகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும், தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகள் என யாரும் இதுவரை சிக்கவில்லை. ஐ.நா. சபையாலேயே சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் பாகிஸ்தானில் தலைமறைவாகி இருந்தான் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவன் எங்கிருக்கிறான் என்ற விவரம் புலனாய்வு அமைப்புகளுக்கே தெரியவில்லை. தாவூத்தை போன்றே அவரது கூட்டாளிகளும் போலீசாருக்கு ஆண்டுக்கணக்கில் தண்ணிகாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் தாவூத் இப்ராஹிமின் டி நிறுவனத்தின் மீது தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ சில மாதங்களுக்கு முன் வழக்குப்பதிவு செய்தது. ஆயுதக்கடத்தல், போதை பொருள் விற்பனை, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச அளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக டி நிறுவனத்தின் மீது என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டுவரும் தாவூத் இப்ராஹிம் குறித்து தகவல் தருபவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று என்ஐஏ இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இதேபோன்று தாவூத்தின் கூட்டாளிகளில் சோட்டா ஷகீலின் தலைக்கு 20 லட்சமும், அனிஸ் இப்ராகிம் ஷேக், ஜாவித் படேல், இப்ராகிம் அப்துல் ரசாக் மேமன் ஆகியோரின் தலைக்கு தலா ரூ.15 லட்சமும் விலை நிர்ணயித்துள்ளது என்ஐஏ.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.