திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் சங்குதீர்த்த குளத்துக்கான நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன்மூலம் குளத்துக்கு நீர் வருவதற்கான வழிகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். திருக்கழுக்குன்றத்தில் புராதன சிறப்புமிக்க வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இது, இந்தியாவின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த மலைக்கோயிலின் அடிவாரத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் மக்களிடையே பிரசித்தி பெற்ற சங்குதீர்த்த குளம் அமைந்துள்ளது.
இக்குளத்தில் முன்பொரு காலத்தில் பல்வேறு சிவதலங்களுக்கு சென்று அபிஷேகம் செய்து வந்த மார்க்கண்டேய முனிவர், இங்கு மலைமேல் வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரரை வழிபட வந்துள்ளார். பின்னர் இந்த குளத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்ய நீரை எடுத்து செல்ல விரும்பினார். அவர் மனமுருகி சிவபெருமானை வேண்ட, இக்குளத்தில் எழுந்த சங்கின் மூலம் வேதகிரீஸ்வரருக்கு நீர் எடுத்து சென்று அபிஷேகம் செய்துள்ளார். அன்றுமுதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதால், சங்குதீர்த்த குளமாக மாறியதாக தலவரலாறுகள் கூறுகின்றன.
மேலும், இந்த சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கரமேளா நடைபெறுகிறது. ஆனால், இம்முறை குளத்தில் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதால், புஷ்கரமேளாவும் சங்கும் பிறக்குமா என பக்தர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இக்குளத்துக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் பல்வேறு இடங்களில் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், திருமண மண்டபங்கள் கட்டியுள்ளனர். இதனால் மழைக் காலத்தில்கூட சங்கு தீர்த்த குளத்துக்கு தண்ணீர் வரத்தின்றி காய்ந்த நிலையில் உள்ளன.
எனவே, அனைத்து நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளையும் முறையாக அகற்றி, அக்கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து, வரும் மழைக்காலத்தில் சங்கு தீர்த்த குளத்தில் முழுமையாக நீர் நிரம்ப மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.