பல்வேறு நாடுகளில் தேசிய சினிமா தினத்தைக் கொண்டாடும் விதமாக அன்று ஒரு நாள் மட்டும் திரையரங்குகளின் டிக்கெட் விலை குறைக்கப்படும். அந்த வகையில் தற்போது இதை இந்தியாவிலும் பின்பற்றத் திட்டமிட்டுள்ளது ‘மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’.
தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு வரும் செப்டம்பர் 16-ம் தேதி மட்டும் நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ்களின் சுமார் 4,000 ஸ்க்ரீன்களுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.75 மட்டும் வசூலிக்கப்படும் என இந்திய மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இதில் PVR, INOX, CINEPOLIS, CARNIVAL, MIRAJ, CITYPRIDE, ASIAN, MUKTA A2, MOVIE TIME, WAVE, M2K போன்ற திரையரங்கு குழுமங்களும் அடங்கும்.
திரையரங்குகளுக்கு வராத மக்களுக்குத் திரையரங்குகளின் அனுபவங்களைக் காண்பிப்பதற்காகவும், மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த ‘சினிமா தினம்’ உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் கோவிட் காலங்களில் நிறைய மக்கள் ஓ.டி.டி தளங்களில் படங்கள் பார்த்துப் பழகிவிட்டதால் இந்தியாவில் மக்களை மீண்டும் திரையரங்கிற்குக் கொண்டு வருவதற்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளபடி அன்றைய தினம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் எந்த மொழிப் படத்துக்கும் வெறும் ரூ.75 செலுத்தி டிக்கெட்டைப் பெறமுடியும்.