தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக மரத்தை வெட்டியபோது பறவை குஞ்சுகள் பலி: ஒப்பந்ததாரர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக ஒரு மரத்தை வெட்டிய போது அதிலிருந்த 100க்கும் மேற்பட்ட பறவைக் குஞ்சுகள் செத்தது தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ய கேரள வனத்துறை தீர்மானித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சாலை ஓரத்தில் உள்ள ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

நேற்று அங்குள்ள வி.கே. படி என்ற இடத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அந்த பகுதியில் உள்ள ஒரு புளியமரம் ஜேசிபி இந்திரம் மூலம் வேரோடு சாய்க்கப்பட்டது. இந்த மரத்தில் நீர்க் காகம் உள்பட ஏராளமான அரிய வகை பறவைகள் கூடு கட்டியிருந்தன. ஆனால் அதை கவனிக்காமல் மரத்தை வெட்டியதால் 100க்கும் மேற்பட்ட பறவைக் குஞ்சுகள் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

பறவைக் குஞ்சுகள் இறந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. மரங்களை வெட்டும்போது அதில் உள்ள பறவை கூடுகளில் முட்டைகளோ, குஞ்சுகளோ இருந்தால் அவை பெரிதாகி பறக்கும் வரை மரத்தை வெட்டக்கூடாது என்று சட்டம்
உள்ளது. ஆனால் அதை மீறி ஒப்பந்ததாரர் இந்த செயலில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து வனத்துறை ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக மரம் வெட்டப்பட்ட பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த வனத்துறை தீர்மானித்துள்ளது. இதன் பிறகு ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.