ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே நண்பரின் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் வாலிபர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தலையில் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் ஜார்ஜ். இவரின் மகன் ராபின் (26). இவர் பொன்னேரி ஏலியம்பேடு மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக இவர், ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம் சென்றுள்ளார். பின்னர், தனது பைக்கை நண்பர் ஓட்ட, அவருடன் பின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஊத்துக்கோட்டை -திருவள்ளூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ராபின் மற்றும் அவரது நண்பர் வந்தபோது இரண்டு பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பின்புறம் வந்து, அவரை எட்டி உதைத்து கீழே தள்ளியது.
இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, ராபினை மட்டும் அந்த கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக தலையில் சரமாரியாக வெட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராபின் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். பின்னர், கொலை செய்த மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். தகவலறிந்த டிஎஸ்பிக்கள் சந்திரதாசன், குமரவேல், இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராபின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பிக்கள் சந்திரதாசன், குமரவேல், இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, வெங்கடேசன், தணிகைவேல் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைடை அமைக்கப்பட்டது.
முதல்கட்டமாக, சந்தேகத்தின் பேரில் 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, குற்றவாளிகளை பிடிக்காமல் நாங்கள் ராபினின் உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் நேற்று மதியம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையறிந்து ஏடிஎஸ்பி ஜேசுராஜ், டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை அவர்களிடம் , சமரசம் செய்து குற்றவாளிகளை விரைந்து பிடிப்போம் என கூறினர். அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்று காவல் நிலையம் அருகிலேயே அமர்ந்து கொண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.