கொச்சி: கேராளாவின் கொச்சி நகரில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் நகரம், கொல்லம் ஆகிய 3 ரயில் நிலையங்களின் புனரமைப்பு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாஜக ஆளும் மாநிலங்களில் இரட்டை இன்ஜின்கள் செயல் படுவதால் அந்த மாநிலங்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.
தற்போது மத்திய அரசு சார்பில் கேரளாவில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இதன்படி கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும். வளர்ச்சி திட்டங்களுக்கு ஊழல் தடையாக இருக்கிறது. ஊழலை ஒழிப்பதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
ஆனால் ஊழலை தடுப்பதில் எதிர்க்கட்சிகள் பின்வாங்கு கின்றன. மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேரளாவில் 2 லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. இதில் 1.3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. இதன்காரணமாக கேரள மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.