‘புஷ்பா’ படத்தின் ‘ஊ சொல்றியா…’ பாடலின் ஹிட்டிற்குப் பிறகு நடிகை சமந்தாவின் கருத்துகள் பலவும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன. அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிடுவது, ரசிகர்களின் கமெண்ட்களுக்கு பதிலளிப்பது என சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவே இருந்துவருகிறார். மேலும், சமந்தா தற்போது ‘யசோதா’, ‘சாகுந்தலம்’ மற்றும் தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படமான ‘குஷி’ என்ற படத்தில் விஜய் தேவாரகொண்டாவுடன் நடிக்கிறார். இப்படிப் பல படங்களின் படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார் .
இந்நிலையில் சமந்தா பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசும் சமந்தா, “நான் எப்போதும் மோடியின் ஆதரவாளர். அவரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறுகிறார். மற்றொரு வீடியோவில் “மோடி, பிரதமராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு நாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவார்” என்று பேசியுள்ளார். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது சமந்தா தனது ஆரம்பக்காலங்களில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு பேசியது. அப்போது மோடி தலைமையிலான மத்திய அரசு ‘தூய்மை இந்தியா’, ‘FIT INDIA’, போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. திரைத்துறை சார்ந்த பல பிரபலங்கள் இதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் போது பல நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் தெருவில் இறங்கிக் குப்பைகளை சுத்தம் செய்து, அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள். அந்தச் சமயங்களில் நடிகை சமந்தாவும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை ஆதரித்து குப்பைகளை சுத்தம் செய்த புகைப்படங்கள் அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்தச் சூழலில்தான் சமந்தாவிடம் மோடி பற்றியும், பா.ஜ.க அரசு பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது மோடி அரசுக்கு ஆதரவாக அவர் பேசியிருந்தார். இந்த வீடியோக்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. இதைக் கண்ட அவரின் ரசிகர்கள் சமந்தாவின் பேச்சை இன்று இருக்கும் அரசியல் சூழலோடு பொருத்தி ‘சமந்தா பா.ஜ.க ஆதரவாளரா’ என்று வியப்புடன் தங்கள் வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வைரல் செய்துவருகின்றனர்.