குன்னூர்: கனமழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் விழுந்த ராட்சத பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. உதகை,குன்னூர், கூடலூர் தாலுகாக்களில் அவ்வப்போது கன மழை பெய்கிறது. குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலையோரத்தில் மண்ணை அகற்றியுள்ளதால் பாறைகள் அந்தரத்தில் தொங்குகின்றன. இரவு நேரங்களில் கன மழை பெய்வதால் சாலையோரத்தில் உள்ள ராட்சத பாறைகள் அவ்வப்போது சாலையில் விழுகின்றன.
பாறைகள் திடீரென சரிந்து சாலையில் விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அதனை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை யினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்தால் மீண்டும் மண்சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை எச்சரிக்கையாக செல்லுமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி யுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி கோடநாட்டில் 59 மி.மீ., மழை பதிவானது. கோத்தகிரி 53, பந்தலூர் 35, கீழ்கோத்தகிரி 26, கூடலூர் 26, தேவாலா 19, கேத்தி 11, குந்தா 8, ஓவேலி 7, எமரால்டு 7, உதகை 4.4, அவலாஞ்சி 3 மி.மீ., மழை பதிவானது.