வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வரும் 4,5ம் தேதிகளில் 14 மாவட்டங்களிலும் 6ம் தேதி 19 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
மேலும் வடக்கு கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.