இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாத்திலிருந்து தொடர்ந்து வரும் கனமழையின் காரணமாக தற்போது வரை 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வெப்பமயமாதல் காரணமாக இமயமலையில் உருகிய பனிப்பாறைகள் இந்த பெருவெள்ளம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த 100 ஆண்டுகளில் இல்லா அளவில் வெப்பம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.
பாதிப்பு
பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.
1,000ஐ கடந்த உயிரிழப்பு
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதியில் இருந்து தற்போது வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 343 பேர் குழந்தைகளும் அடங்குவர். அதிகபட்சமாக சிந்துவில் மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தானில் 234 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மீட்பு படையினரும் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெப்பம்
இந்நிலையில் இந்த பெரு வெள்ளம் மற்றும் திடீர் காலநிலை மாற்றத்திற்கான காரணமாக வெப்பமயமாதல் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக வெப்பமயமாதல் காரணமாக இமய மலையில் உருகும் பனி பாறைகள் இந்த வெள்ளத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த ஆண்டு சூரிய வெப்ப அலை ஒன்று பூமியை தாக்கிய நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐரோப்பிய கண்டத்திலும் வெப்பம் வாட்டி வதக்க தொடங்கியது.
ஆய்வு
ஒவ்வொரு ஆண்டும், வானிலை வெப்பமடைகையில், இந்தியாவின் வட மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சோட்டா ஷிக்ரி பனிப்பாறையை ஆய்வு செய்வதற்காக இந்திய விஞ்ஞானிகளின் குழுக்கள் இமயமலை மலைகளுக்குச் செல்லும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் பனியின் அளவை கண்டறிந்து அவை எந்த அளவு குறைந்துள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இது இந்த மலைகளுக்கு கீழே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மிகுந்த உதவியானதாக இருக்கும்.
எல் நீனோ பாதிப்பு
ஆனால் இந்த ஆண்டு இவ்வாறு அளக்க மேலே செல்ல முடியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், வெப்பமயமாதல் காரணமாக பனி உருகியதில் இந்த ஆய்வு மையம் முழுமையாக நீரில் அடித்து செல்லப்பட்டுவிட்டது என்று இந்தூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பனிப்பாறை நிபுணர் முகமது ஃபரூக் ஆசம் கூறியுள்ளார். இவ்வாறு பாறைகள் வேகமாக உருகுவதன் மூலம், ‘எல் நீனோ’ எனும் பாதிப்பு ஏற்படும். அதாவது புவி வெப்பமாதலின் காரணமாகப் புவியின் கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலின் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றமே ‘எல் நீனோ’ என அழைக்கப்படுகிறது.
பனிப்பாறைகள்
இந்த பனிப்பாறைகள் உருகும் நிலையில் கடும் வெள்ளம் ஏற்படும். திபெத்தில் தொடங்கி பாக்கிஸ்தான் வழியாகப் பாய்ந்து கராச்சிக்கு அருகில் அரபிக்கடலில் கலக்கும் சிந்து நதிப் படுகை, இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும். வெள்ள நீர் மண்ணில் உட்புகாது. இதனால் நிலத்தடி நீரின் அளவு உயராது. எனவே வெள்ளம் கடும் வறட்சியைதான் ஏற்படுத்தும். இமயமலை, காரகோரம் மற்றும் இந்து குஷ் மலைத்தொடர்களில் கிட்டத்தட்ட 55,000 பனிப்பாறைகள் உள்ளன.
வளரும் நாடுகளை பாதிக்கும் வெப்பமயமாதல்
இவை சுமார் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவளிக்கின்றன. இந்த பனி பாறைகளில் 7,000 க்கும் மேற்பட்டவை பாகிஸ்தானில் உள்ளன. தற்போது இந்த பாறைகள் அதிக அளவில் உருகி வருவதால் ஆயிரக்கணக்கான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. எனவே இனி வரும் நாட்களில் வெள்ளம் மற்றும் காலநிலை மாற்றம் அதிகரிக்கும் என்றும் உலக வெப்பமயமாதல் பாகிஸ்தான் உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளை கடுமையாக பாதிக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.