தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 4 ஆண்டுகளிலேயே பிரிந்துவிட்டனர்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தன்னை ஒரு தனி நடிகையாக நிலைநிறுத்தி கொண்டுள்ள சமந்தா தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்து வைத்து இருக்கிறார்.
இதன் பலனாக, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்ட சமந்தா தற்போது ஃபேமிலி மேன் 2 வெப் சீரிசில் நடித்ததற்கு பின்னர், இந்திய அளவில் பிரபலமாகி உள்ளார்.
இதற்கிடையே புஷ்பா படத்தில், ‘ஊ அண்டாவா’ என்ற பாடலுக்கு ஆடிய நடனத்தின் மூலம், சமந்தா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த பாடல் பலரது ரிங்டோனாகவும் மாறும் அளவுக்கு பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை சமந்தா விரைவில் இந்தி படத்தில் அறிமுகம் ஆக உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் ரெக்கை கட்டி பறந்தபடி உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து நடிகை சமந்தா பேசுகின்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது பாஜகவினர் மத்தியில் உற்சாகத்தையும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில், ‘நான் எப்போதும் மோடி ஆதரவாளர். அவரது செயல்பாடுகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது’ என சமந்தா கூறுகிறார். மேலும் ஒரு வீடியோவில், ‘பிரதமராக மோடி பொறுப்பு ஏற்றதற்கு பின்னர் நாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
பிரதமர் மோடி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வார். நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவார்’ என சமந்தா பேசி இருக்கிறார். இந்த வீடியோக்களை தற்போது பாஜகவினர் சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சந்திப்பு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படு்த்தி உள்ளது.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகைகளில் பிசியாக வலம் வரும் நடிகை சமந்தாவும் பிரதமர் மோடி குறித்து உயர்வாக பேசும் வீடியோ வைரலாக பரவி வருவதால் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை பாஜக இப்போதே முடுக்கி விட்டுள்ளதாகவே பலரும் பேசி வருகின்றனர்.
இதைவிட ஒருபடி மேலே போய் நடிகை சமந்தா எங்களுடைய கட்சியில் இணைய போகிறார் என பாஜக தொண்டர்களே கொளுத்தி விடுவது எதன் அடிப்படையில்? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.