குருகிராம்: ஹரியாணாவில் பாஜக மூத்த தலைவர் பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரசியல் போட்டி காரணமாக வேட்பாளர்கள் கடத்தப்படுவது, கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஹரியாணா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள சோஹ்னா ஊராட்சித் தலைவருக்கான தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட அங்குள்ள பாஜக நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சோஹ்னா ஊராட்சித் தலைவர் தேர்தலில் தன்னை வேட்பாளராக முன்னிறுத்த பாஜக மூத்த தலைவரான சுக்பீர் கட்டானா (52) தீவிரமாக முயற்சி செய்து வந்துள்ளார். ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு நெருக்கமானவர் என்பதால், சுக்பீர் கட்டானாவுக்கு ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட எளிதில் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டு வந்தது. இதனால் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் சிலர் அவர் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்துள்ளனர்.
இந்த சூழலில், தனக்கு புதிய துணிகளை வாங்குவதற்காக தனது நண்பர் ராஜேந்தர் என்பவருடன் குருகிராமில் உள்ள துணிக்கடை ஒன்றுக்கு சுக்பீர் கட்டானா நேற்று மதியம் சென்றார். அவர்கள் துணிக்கடைக்குள் நுழைந்த 5 நிமிடங்களில் அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அதே கடைக்குள் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சுக்பீர் கட்டானாவை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பினர்.
இதில் படுகாயமடைந்த சுக்பீரை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுக்பீர் கட்டானா சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் குருகிராமில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த குருகிராம் போலீஸார் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் சுக்பீர் கட்டானாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சுக்பீர் கட்டானாவின் மைத்துனர் சாமன் மற்றும் அவரது கூட்டாளிகளே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சோஹ்னா ஊராட்சித் தலைவர் பதவிக்கு சாமனும் போட்டியிட்டு வந்த நிலையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக சுக்பீரை அவர் கொலை செய்திருக்கக்கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.